📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 02, 2026 07:04 AM

இந்தியா, சீனா காற்று மாசு ஏற்படுத்தியதே பேரிடருக்கு காரணம் என்கிறது நேபாளம்!

இந்தியா, சீனா காற்று மாசு ஏற்படுத்தியதே பேரிடருக்கு காரணம் என்கிறது நேபாளம்!

காத்மாண்டு: மாபெரும் பனி சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு காலநிலை மாற்றமே காரணம். காற்று மாசு ஏற்படுத்திய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி என்பதற்கு பதிலாக காலநிலை இழப்பீட்டை வழங்க வேண்டும், என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கானல் வலியுறுத்தியுள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளம், சமீபத்தில் பனிப்பாறை உடைந்ததால் உருவான பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பெரும் பாதிப்புகளை சந்தித்தது. மீட்புப் பணிகளில் இந்தியா உட்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. மேலும், பல நாடுகள் நிவாரணத்துக்கான உதவித் தொகையை அறிவித்துள்ளன.

இது குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல், நேற்று கூறியுள்ளதாவது: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு உலகளாவிய புவி வெப்பமடைதலே காரணம். ஆகையால், இது வழக்கமான மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண பணி என்றோ அல்லது தொண்டு என்றோ பார்க்கக்கூடாது. மாறாக, உலகளாவிய பருவநிலை மாற்றத்தால் நாங்கள் சந்தித்த பேரழிவுக்கு கிடைக்க வேண்டிய நீதி மற்றும் இழப்பீடு ஆகும்.

இதற்காக உலக நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள 'நஷ்டம் மற்றும் பாதிப்புக்கான நிதி' அமைப்பிடம் நேபாள நிதியமைச்கம் முறையான கோரிக்கை விடுத்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய கார்பன் உமிழ்வு நாடுகளான இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகள் இதற்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பேற்பதுடன், இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நுவாகோட் மாவட்டத்தின் பெத்ராவதி பகுதியில் இருந்த ஒரு வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நேபாளம் - திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இடைவிடாது செயல்பட்டு, கடந்த ஆறு நாட்களில் மட்டும் 100 மீட்பு பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார் பிரியா அதிகாரி, 40. இவர் நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் ஆவார். கடுமையான மலைப்பகுதி மீட்பு பணியில் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ள பிரியாவின் செயல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள நதிகளில் தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருவதால் நேற்று புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திபெத் மற்றும் நேபாளத்தில் மேல் மலை பகுதிகளில் இருந்து வரும் போட்டே கோஷி மற்றும் திரிசூலி நதிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை என நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

* நேபாளத்தில் வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது

* 583 வெளிநாட்டவர்கள் மற்றும் பல பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட 4,000 பேர் இன்னும் காணவில்லை

* இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

* சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்; 550 பேர் காணவில்லை.