இரண்டாவது சுற்றில் பிரனாய் * சிங்கப்பூர் பாட்மின்டனில்...
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பாட்மின்டனில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பிரனாய்.
சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய் 33, உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். 2023 உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற பிரனாய், முதல் செட்டை 10-21 என இழந்தார்.
அடுத்த செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த, 3வது, கடைசி செட்டை பிரனாய் 21-18 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நடந்த போட்டி முடிவில் பிரனாய் 10-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலேசியாவின் வாங் தியன், லிம் சியு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-14, 20-22, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், 20-22, 21-19, 17-21 என உலகின் முன்னாள் 'நம்பர்-1' வீரர், சிங்கப்பூரின் லோ கியன் இயுவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா, 21-11, 19-21, 12-21 என சீன தைபேவின் ஹிசியாங் தியிடம் வீழ்ந்தார்.