📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 16, 2026 10:31 PM

டெஸ்கர் சாலை கடைவீட்டில் சட்டவிரோதக் கட்டுமானப் பணிகள்: உரிமையாளருக்கு $250,000 அபராதம்

டெஸ்கர் சாலை கடைவீட்டில் சட்டவிரோதக் கட்டுமானப் பணிகள்: உரிமையாளருக்கு $250,000 அபராதம்

லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள டெஸ்கர் சாலை பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட கடைவீட்டில், அதிகாரமின்றிக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதற்காக 54 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசிக்கு $250,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாணிக்கம் நாகராஜன் என்ற அந்த ஆடவரை அந்தப் பணிகளைச் செய்ய அனுமதித்த ‘லயன் மேனேஜ்மென்ட் லிமிட்டட்’ நிறுவனத்திற்கும் $150,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான இடத்தை மேற்பார்வையிட தகுதிவாய்ந்த நபரைப் பணியில் அமர்த்தாததன் பேரில் நாகராஜன் மீது விதிக்கப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றம் தண்டனை வழங்கியபோது கருத்தில் கொண்டது.

நூறாண்டுகளுக்கு மேல் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கடைவீட்டிற்கு ஈடுகட்ட முடியாத மரபுடைமை இழப்பை இவர்களின் செயல்கள் ஏற்படுத்தியுள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் (URA), புதன்கிழமை (ஏப்ரல் 22) வெளியிட்ட தனது செய்தியறிக்கையில் குறிப்பிட்டது.

அக்டோபர் 2022ல் லிட்டில் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியை நாகராஜன், லயன் நிறுவனம் வழியாக வாங்கினார்.

கடைவீடு பாதுகாக்கப்பட்டது என்பதையும், அதற்கான புதுப்பிப்புப் பணிகளைச் செய்ய நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் அனுமதி தேவை என்பதையும் அறிந்திருந்தும், அதனைத் தங்குவிடுதியாக மாற்றுவதற்கான வேலைப்பாடுகளைச் செய்ய நாகராஜன், லயன் நிறுவன அதிகாரிகளைப் பணித்தார்.

தகவல் கிடைத்ததன்பேரில் நகர மறுசீரமைப்பு ஆணையம் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் கடைவீட்டில் சோதனை நடத்தி, அதிகாரமின்றிச் செய்யப்பட்ட வேலைப்பாடுகளைக் கண்டறிந்தது.

சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு மரபுடைமைக் கட்டடங்களின் பாதுகாப்பு முக்கியம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பாதுகாப்பு நிர்வாகத் துறை இயக்குநர் திரு. கெல்வின் ஆங் தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“இத்தகைய கட்டடங்கள் நமது வரலாறு, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றின் சின்னங்கள். மாற்றங்களுக்கு இடையிலும் அவை ஒரு தொடர்ச்சியைக் குறிக்கின்றன. நகரம் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் அத்தகைய கட்டடங்களைப் பாதுகாப்பதால், வருங்காலத் தலைமுறையினரும் தொடர்ந்து நமது கடந்த காலத்துடன் தொடர்பில் இருக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

திட்டமிடல் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டோருக்கு $500,000 வரையிலான அபராதமோ, 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.