📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 07, 2026 06:03 PM

இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சிங்கப்பூர், லக்சம்பர்க்

இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சிங்கப்பூர், லக்சம்பர்க்

குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உள்ளிட்ட வளர்ந்து வரும் முக்கியமான துறைகளில் சிங்கப்பூரும் லக்சம்பர்க்கும் தங்களது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃபிரைடென் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் சிங்கப்பூருக்கு வந்துள்ள முதல் அதிகாரபூர்வப் பயணம் இதுவாகும்.

அவரை வரவேற்கும் வகையில் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 7) பிரதமர் லாரன்ஸ் வோங் ஏற்பாடு செய்திருந்த அதிகாரபூர்வ மதிய விருந்தின்போது, இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அப்போது உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், லக்சம்பர்க் சிங்கப்பூருக்கு ஒரு நல்ல பங்காளி மட்டுமன்றி, ஒத்த எண்ணமும் ஒத்த சூழலும் கொண்ட ஒரு நாடு என்பதை சுட்டிக்காட்டினார்.

புவியியல் ரீதியாக இரு நாடுகளும் தொலைவில் அமைந்திருந்தாலும், பெரிய பக்கத்து நாடுகளால் சூழப்பட்ட சிறிய நாடுகளாக இருப்பது, குறைந்த அளவிலான உள்நாட்டுச் சந்தை மற்றும் இயற்கை வளங்கள் அற்ற சூழல் போன்ற பல பொதுவான தன்மைகளைக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

“இருப்பினும், எங்களது அளவைக் கொண்டு எங்களது இலக்குகளின் எல்லையை ஒருபோதும் தீர்மானித்ததில்லை. மாறாக, சிறிய நாடு என்பதை வெளியுலகை நோக்கிய பார்வைக்கான காரணமாக மாற்றியுள்ளோம். உலகிற்குத் திறந்தமனதுடன் இருப்பது, எல்லைகளைத் தாண்டி மக்களையும் வணிகங்களையும் இணைப்பது மற்றும் நம்பகமான பங்காளிகள் என்ற நற்பெயரைக் கட்டியெழுப்புவது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.

இந்த அணுகுமுறை இரு நாடுகளுக்கும் சிறந்த பலன்களை அளித்துள்ளதுடன், அவற்றின் வட்டாரங்களில் பெரிய சந்தைகளுக்கான நுழைவாயில்களாகவும் முக்கிய நிதி மற்றும் வர்த்தக மையங்களாகவும் திகழ உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.