📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 28, 2026 07:04 AM

இத கூடவா ஆட்டைய போடுவாங்க... சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிக்கிய ஜாக்கெட் திருடன்

இத கூடவா ஆட்டைய போடுவாங்க... சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிக்கிய ஜாக்கெட் திருடன்

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் ஜாக்கெட் திருடிய பிரிட்டன் இளைஞர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடை வாயிலில் வைக்கப்பட்டிருந்த பொம்மைக்கு, ஆண்கள் அணியக்கூடிய நீல நிற டெனிம் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஜாக்கெட் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி திருடு போனது. இதுகுறித்து, கடையில் விற்பனை உதவியாளராக பணிபுரிந்தவர் போலீசில் புகார் அளித்தார்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி ஒருவர், பொம்மை அணிந்திருந்த ஜாக்கெட்டை அகற்றி, அதற்கான பணத்தை செலுத்தாமல எடுத்துச் சென்றது தெரியவந்தது. சுமார் 350 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள அந்த ஜாக்கெட்டை திருடிச் சென்ற நபரை போலீசார் அடையாளம் கண்டு, கைது செய்ய சென்ற நேரத்தில் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டார்.

தற்போது 26 வயதான அந்த பிரிட்டன் நபர், இந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அன்று சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதாவது, ஒரு விமானத்தில் இருந்து இறங்கி மற்றொரு விமானத்தில் மாறுவதற்காக அவர் காத்திருந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர்.

விமானத்தில் வந்து செல்லும் அளவுக்கு அவரிடம் வசதி இருந்தும் ஏன் ஜாக்கெட்டை திருடினார் என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவர் மீது கடந்த 25-ந் தேதி அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.

சிங்கப்பூர் சட்டப்படி, கடைத் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். கடந்த ஜூன் 11-ந் தேதி விமான நிலைய கடையில் 2 வாசனை திரவிய பாட்டில்களை திருடிய 50 வயதான போலந்து நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது 2 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, ஜாக்கெட் திருட்டு வழக்கில் பிரிட்டன் வாலிபர் சிக்கியுள்ளார். சிங்கப்பூரில் திருட்டுக் குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.