இயக்குநராக மகுடம் சூடினாரா விஷால்? | Magudam Review | Vishal
இயக்குநராக மகுடம் சூடினாரா விஷால்? | Magudam Review | Vishal
கிருபா - லிங்கா வாழ்க்கையில் வரும் சிக்கல்களே `மகுடம்'கிருபாகரன் (விஷால்) சென்னையில் மெடிக்கல் ரெஃப் ஆக அமைதியாக வாழ்ந்து வரும் நபர். மனைவி, மகன், மகள் என நிம்மதியாக வாழ்ந்தாலும், பணம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்ற ஒரு கார் வாங்குகிறார். இன்னொரு பக்கம் விசாகப்பட்டினத்தில் உள்ள கேங்ஸ்டர் லிங்கா (விஷால்) கடல் மூலமாக வரும் ஒரு கடத்தல் தொடர்பான பஞ்சாயத்தில் பலரின் பகையை சம்பாதிக்கிறார். கிருபாரனின் காரும், லிங்காவின் கடத்தலும் ஒரு புள்ளியில் இணைகிறது. அதன் பின் என்ன நடக்கிறது? கிருபாகரன் - லிங்கா இடையே என்ன சம்மந்தம் என்பதெல்லாம் தான் `மகுடம்' பட மீதிக்கதை.
ஒரு சுவாரஸ்யமான ஆக்ஷன் த்ரில்லரை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஷால். அறிமுகப் படத்திலேயே ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த ஜனரஞ்சக படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார். நடிகராக விஷாலுக்கு இரண்டு பாத்திரங்கள், மூன்று வெவ்வேறு தோற்றங்கள். கிருபாவாக பிரச்சனையை கண்டு ஒதுங்கி போவது, லிங்காவாக அடாவடி செய்வது என இருவேறு பாத்திரங்களுக்கு வித்தியாசம் காட்ட முயற்சித்துள்ளார். மனைவியிடம் அடங்கிப் போகும் காட்சி, ஒரு தாக்குதலுக்கு பின்னர் கலங்கும் காட்சி என முடிந்த வரை தன் நடிப்பால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்கிறார். துணை பாத்திரங்களில் துஷாரா, தம்பிராமையா, ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் வந்து போகிறார்கள். இதில் அழுத்தமாக மனதில் பதிவது அஞ்சலியின் நடிப்பு தான். அன்னபூரணி ரோலில் ஒரு ஆக்ரோஷமான பெண் பாத்திரத்தில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களோ, பின்னணி இசையோ பெரிய அளவில் கவரவில்லை. ரிச்சர்ட் எம் நாதன், அபிநந்தன், ஜெய் கார்த்திக் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் இருந்தும் படத்துக்கு எந்த வலுவும் சேர்க்கவில்லை. ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க நினைக்கும் ஒருவனின் கனவாக துவங்கும் இந்தக் கதை, கடைசியில் வெறும் பலிக்குப் பழி கதையாக சுருங்கி விடுகிறது. ஒரு கார் மீது நடக்கும் துப்பாக்கி சூடு வரை கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் போகும் கதை அதன் பின் நம் பொறுமையை ஓவராகவே சோதிக்கிறது.
டேப் ரெக்கார்ட்டர் வைத்து வரும் காட்சி, லிங்கா பாத்திரம் ஒன் மேன் ஆர்மியாக சண்டை போடும் காட்சி, அதில் முத்து மணிமாலை பாடல் பயன்படுத்தப்பட்டிருந்த விதம், சில பாத்திரங்களில் வருபவர்களின் நடிப்பு என பல விஷயங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். மேலும் படத்தில் திருப்பங்கள் என சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் மிக எளிதில் யூகிக்க முடிவதாக இருக்கிறது. மொத்தத்தில் கதை, திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி இருந்தால், நல்ல ஆக்ஷன் த்ரில்லராக வந்திருக்கும்!