Jailer 2 Review: ஜெயிலர் 2 விமர்சனம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூர சம்பவம்.. ஆனால்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இந்த வயதிலும் பக்கா மாஸ் படத்தைக் கொடுக்க முடியும் என்பதை இயக்குநர் நெல்சன் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தை விட ரசிக்கும்படியான படத்தைக் கொடுக்க வேண்டும் என முதல் பாதியில் காமெடி காட்சிகளை சரியாக வைத்து மாஸ் சீன்களை ஸ்க்ரீன்பிளே மூலம் விஷுவலாக்கிய விதம் ரசிகர்களை தியேட்டர்களில் விசிலடிக்கவும் தொண்டைக் கிழிய கத்தவும் செய்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா, மிர்ணா மேனன், யோகி பாபு, நமோ நாராயணன், வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடன் ஜெயிலர் படத்தில் கேமியோவாக வந்த மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் உடன் இன்னொரு கேமியோவும் படத்தில் எதிர்பார்த்ததை போலவே வரும் காட்சி தியேட்டரை தெறிக்கவிடுகிறது.
ஆனாலும், ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்திலும் வில்லன் போர்ஷனை மீண்டும் வீக்காகவே நெல்சன் எழுதியிருப்பது ஏன் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஜெயிலர் 2 படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ஜெயிலர் 2 கதை: வர்மனை கொன்று 3 கன்டெயினர்களில் சாமி சிலைகளை எடுத்துக் கொண்டு சென்றவன் யார் என்பதைக் கண்டுபிடிக்க திலீப்புக்கு (சுராஜ் வெஞ்சரமூடு) பெரிய பாஸ் போதி கல்பாக் (எஸ்.ஜே. சூர்யா) ஆர்டர் போடுகிறார். இன்னொரு பக்கம் சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் தனது குடும்பத்துடன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். கணவனை இழந்து மனைவி மிர்ணா ரொம்பவே சோகத்தில் இருக்கிறார்.
வர்மனை கொன்றவனை கண்டுபிடிக்க திலீப் ஆட்களை அனுப்பிய நிலையில், மூர்த்தி அண்ணன் (நமோ நாராயணன்) எனும் கேரக்டரை வைத்து திலீப் கூடவே கார் டிரைவராக டைகர் முத்துவேல் பாண்டியன் இருப்பதை திலீப் கண்டுபிடிக்க ஜெயிலர் படத்தின் காட்சியை பயன்படுத்திய விதம் அட்டகாசம்.
அல்ல போலேலே பாடலுக்குப் பிறகு ஜெயிலரை தீர்த்துக்கட்ட திலீப் போடும் பிளான் என்ன ஆனது? இடைவேளைக்கு பின்னர் வரும் போதி கல்பாக், காந்தா (வித்யா பாலன்) ஜெயிலரின் நண்பர் குடும்பத்தை பிடித்து வைத்துக் கொண்டு என்ன செய்தனர். தன்னுடைய MVP கேங் உடன் டைகர் முத்துவேல் பாண்டியன் எதிரியை வீழ்த்தினாரா? இல்லையா? ஜெயிலர் 3க்கான லீடு உள்ளதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் எப்படி இருக்கு?: கோலமாவு கோகிலா, டாக்டர் ரூட்டில் முதல் பாதி முழுவதும் நமோ நாராயணன், யோகி பாபுவை வைத்து காமெடியாக கொண்டு சென்ற விதம் தியேட்டரில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.
வர்மன் தனக்கு மேல் மிகப்பெரிய டீம் உள்ளது என்றும் அவர்கள் உன்னை சும்மா விடமாட்டார்கள் என சொல்லிவிட்டு சாகும் நிலையில், 2வது பாகத்தில் வர்மனுக்கு மேல் உள்ளவர்களை தேடிப் பிடித்து ஜெயிலர் என்ன பண்ணார் என்கிற கதையை எடுத்துக் கொண்டு தியேட்டர் பிளாஸ்ட் ஸ்க்ரீன்பிளேவை செதுக்கி நெல்சன் படத்தைக் காப்பாற்றி விட்டார்.
சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் நமோ நாராயணன் இடையே நடக்கும் அந்த செஸ் விளையாட்டு சீனெல்லாம் முதல் பாதியில் அல்டிமேட். எஸ்.ஜே. சூர்யா டெரர் இன்ட்ரோ கொடுத்தாலும், அதன் பின்னர், ஜெயிலருக்கு முன்பாக அவரும் பெட்டிப் பாம்பாக அடங்குவது ரிப்பீட் காட்சிகளை பார்க்கும் ஃபீலிங்கை ஏற்படுத்துகிறது.
சிவராஜ்குமார் குடும்பத்துக்கு நேரும் ஆபத்து, மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் என்ட்ரி, ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ என 2வது பாதியையும் மாஸ் குறையாமல் பார்த்துக் கொண்டதால் ரசிகர்கள் கடைசி வரை உச்சகட்ட மகிழ்ச்சியிலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறுகின்றனர்.
பிளஸ்: அனிருத்தின் இசை தான் படத்திற்கு பலம். படத்தைக் கமர்ஷியலாக கொண்டு செல்ல தனது பாடல்களையும் அவர் சரியாகவே பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணனின் ரியாலிட்டியான ஒளிப்பதிவு, முதல் பாதியில் வரும் பாலம் சீன், பிந்தாஸ் பாடலுக்குப் பிறகு வரும் அந்த கன்டெயினரில் கடத்தும் சீன் என ஒளிப்பதிவு அட்டகாசம். முத்துவேல் பாண்டியனின் வீக்னெஸ் என்ன என்பதை பார்த்து எஸ்.ஜே. சூர்யா அடிக்கும் இடம் எமோஷனலாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது பெரிய பலம். வித்யா பாலனுக்கு சூப்பர் ஸ்டார் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் போர்ஷனும் அட போட வைக்கிறது. கிளைமேக்ஸில் 3வது பாகத்துக்கான லீடும் சரியாக வைத்து நெல்சன் அடுத்த பாகத்துக்கும் அடிபோட்டுள்ளார்.
மைனஸ்: ஆனால், அதே சமயம் முதல் பாதி நகர்ந்ததை போல 2வது பாதி காமெடி காட்சிகளுடன் கலகலப்பாக நகராமல் கொஞ்சம் சீரியஸாக நகர்கிறது. ஆனாலும், ஜெயிலருக்கே இத்தனை பேர் சப்போர்ட் வருகின்றனர் என்றால், பெரிய சிலை கடத்தல் கேங்கான போதி கல்பாக் கேங்குக்கு ஏன் யாருமே வருவதில்லை என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனால், ஜெயிலர் படத்தை எந்த ஃபார்முலாவில் எடுத்து ஹிட் அடித்தாரோ நெல்சன் அதே ரூட்டிலேயே 2வது பாகத்தையும் கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்திவிட்டார். ஜெயிலர் 2 கண்டிப்பாக பிளாக்பஸ்டர் படம் தான். மிஸ் பண்ணாம தியேட்டரில் பார்த்து விடுங்க!