தேர்தல் வெற்றி, தோல்வியைத் தாண்டி கம்யூனிஸ்டுகளுக்கு அரசியல் இருக்கிறது!
தேர்தல் வெற்றி, தோல்வியைத் தாண்டி கம்யூனிஸ்டுகளுக்கு அரசியல் இருக்கிறது!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள், தமிழக இடைத்தேர்தல் முடிவுகள், தவெக அரசுக்கான ஆதரவு, இடது சாரிகளின் எதிர்கால அரசியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பல கேள்விகளை முன்வைத்தோம்.
அதற்கு அவர் பதில்கள் வருமாறு:
கேள்வி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவதன் நோக்கம் என்ன?
பதில்: இந்தப் போராட்டம் கம்யூனிஸ்டுகள் மட்டும் நடத்துகின்ற போராட்டம் அல்ல. இடதுசாரிகள், மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக சக்திகள் எனப் பல்வேறு தரப்பினரும் இணைந்து நடத்துகின்ற போராட்டம். இது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம். கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பு? தலைமைத் தேர்தல் ஆணையர்தான் பொறுப்பு. எனவே அவர் பதவி விலக வேண்டும். இதற்கு ஒன்றிய அரசும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தெரியாமல் இவ்வளவு பெரிய நடவடிக்கை நடைபெற்றதா? நமது நாட்டில் பொருளாதார சமத்துவம் இல்லை. சமூக சமத்துவமும் முழுமையாக இல்லை. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இருக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஆனால் வாக்குரிமையில் மட்டும்தான் அனைவருக்கும் சமத்துவம் இருக்கிறது. ஒரு வாக்கு, ஒரு மதிப்பு என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த உரிமையையும் பறித்துவிட்டால் தேசத்தின் உயிரையே பறிப்பதற்குச் சமம். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.
கேள்வி: அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளன. இதை இடதுசாரிகளுக்கான பின்னடைவாகப் பார்க்கலாமா?
பதில்: ஒரு சில இடைத்தேர்தல்களில் நாங்கள் பெற்ற வாக்குகளை மட்டும் வைத்து கம்யூனிஸ்டுகளின் பலத்தை மதிப்பிடக் கூடாது. தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளில் எங்களுக்கு வலுவான அமைப்புகள் இருக்கின்றன. நாகப்பட்டினம், மன்னார்குடி, சிவகங்கை, திருப்பூர், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடதுசாரிகளுக்கென அரசியல் செல்வாக்கு இருக்கிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் பெறுகின்ற வாக்குகளைக் கணக்கிட்டால்தான் எங்களுடைய உண்மையான பலத்தை மதிப்பிட முடியும். ஒரு தொகுதியில் ஆயிரம் அல்லது ஆயிரத்து 300 வாக்குகள் பெற்றுவிட்டார்கள் என்பதற்காக கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றவர்கள் என்று சொல்லமுடியாது. சாதி, மதத்தைச் சொல்லாமல், பணம் கொடுக்காமல், கொள்கையை முன்வைத்து 1300 பேர் வாக்களிக்கிறார்கள் என்றால் அவை மாசுபடாத வாக்குகள். அதுதான் எங்களுக்குப் பெரிய ஊக்கம். தேர்தல் வெற்றி, தோல்வியைத் தாண்டியும் கம்யூனிஸ்டுகளுக்கு அரசியல் இருக்கிறது.
கேள்வி: திமுகவின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டியிடுவதாகவும், மறைமுகமாகத் தவெகவுக்கு உதவுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றனவே?
பதில்: சமூக வலைதளங்களில் ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் பேசுவார்கள். அவை அனைத்துக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பொறுப்புள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் வைத்தால் அதற்குப் பதில் சொல்லலாம். திமுகவின் வாக்குகளைப் பிரிப்பதற்காக நாங்கள் தனித்துப் போட்டியிடவில்லை. திமுக ஒரு வலுவான அரசியல் கட்சி. அதன் வாக்குகளைக் குறைப்பதற்காக அரசியல் செய்கின்ற நிலையில் நாங்கள் இல்லை. எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. அரசியல் நிலைப்பாடு இருக்கிறது. எங்களால் தனித்துக் களமாட முடியும். ஒரு தொகுதியில் ஆயிரம் பேர் எங்களுக்கு வாக்களித்தால் அவர்கள் மக்கள் இல்லையா? அவர்களுடைய வாக்குகளுக்கு மதிப்பு இல்லையா? எங்களை வெறும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலோ, தேர்தலில் பெற்ற வாக்குகளிலோ தேடாதீர்கள். துப்புரவுத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் பாருங்கள். அரசு ஊழியர் களின் போராட்டங்களில் பாருங்கள். டெல்லியில் நடைபெறும் உழைக்கும் மக்களின் போராட்டங்களில் பாருங்கள். தமிழ்நாட்டின் உரிமைக்கான போராட்டங்களில் பாருங்கள். அங்குதான் கம்யூனிஸ்டுகளின் அரசியல் இருக்கிறது. அரசியல் என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல.
கேள்வி: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து போராடுகின்றனர். ஆனால் திமுக, அதிமுக, தவெக போன்ற பெரிய கட்சிகள் போதுமான அளவில் போராடவில்லை என்று நினைக்கிறீர்களா?
பதில்: தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக ஏன் போராடவில்லை? அது மிகப்பெரிய அரசியல் கட்சிதானே? திமுக ஏன் இந்தப் பிரச்னையின் தீவிரத்திற்கேற்ப போராட்டங்களை முன்னெடுக்கவில்லை? தவெக ஏன் குரல் எழுப்பவில்லை? 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சாதாரணமான பிரச்னையா? நாட்டின் மிகப்பெரிய ஜன
நாயகப் படுகொலை என்றுதான் இதைப் பார்க்கிறோம். தேர்தல் ஆணையரின் பதவி விலகலை வலியுறுத்துவது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியாலோ, வெறுப்பாலோ அல்ல. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகத்தான். இந்த விவகாரத்தில் பொறுப்புள்ள அரசியல் கட்சிகளும் தலைவர்களும் குரல் எழுப்பாவிட்டால் அது எப்படி சரியான அரசியலாக இருக்கும்? ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இல்லையென்றால் நாடு இருண்டுபோகும். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டங்களும் ஒன்றோடொன்று
தொடர்புடையவை.
கேள்வி: தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், அந்தக் கட்சியுடனான உறவு என்ன? எதிர்காலத்தில் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புள்ளதா?
பதில்: மக்களுடைய தேர்தல் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, ஆளுநர் ஆட்சியோ அல்லது வேறு புறவழிகளிலோ பாஜ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஜனநாயக அடிப்படையில் முடிவு எடுத்திருக்கிறோம். தவெக அரசுக்கு வெளியிலிருந்துதான் ஆதரவு அளிக்கிறோம். அமைச்சரவையில் நாங்கள் இடம்பெறவில்லை. கூட்டணியிலும் இல்லை. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளை ஜனநாயக சக்திகளாகப் பார்க்கிறோம். பாஜ, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் அரசியலைத்தான் எதிர்க்கிறோம். நாட்டின் மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகத் தேவைப்படும் சூழலில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடத் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பையும் தனித்த அரசியல் பயணத்தையும் தொடர்ந்து முன்னெடுப்போம். எங்களுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுகின்ற அரசியல் கிடையாது.
ஆதவ் சொல்வதுபோல் இடைத்தேர்தல் வந்தால் எதிர்ப்போம்
கேள்வி: தமிழகத்தில் மேலும் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்று ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் உட்பட்ட அரசியல்தான் நடைபெற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான அரசியல் அணுகுமுறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் தீர்ப்பு ஆகியவற்றுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் மூலமாக அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயன்றால் அதை எதிர்ப்போம். அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால் கம்யூனிஸ்டுகள் நிச்சயமாக எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள்.
கேள்வி: அண்மைய தேர்தல்களில் முக்கியமான அரசியல் தலைவர்கள் தோல்வி யடைந்துள்ளனர். தேர்தல் முறைகேடுகள் காரணமாகவே சிலர் தோற்கடிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: தேர்தலில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. கம்யூனிஸ்டுகளும் பல தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருக்கிறோம். வெற்றியும் பெற்றிருக்கிறோம். கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறோம். கூட்டணி அமைத்தும் தோல்வியடைந்திருக்கிறோம்.
ஒரு அரசியல் கட்சி தோற்கலாம். ஒரு அரசியல் தலைவர் தோற்கலாம். ஆனால் ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது. இதுதான் முக்கியம். முறைகேடுகளை நடத்தித்தான் ஒரு கட்சி வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவானால், அது ஜனநாயகத்தைத் தோற்கடிப்பதாகும். தேர்தல் என்பது மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற ஜனநாயக நடைமுறையாக இருக்க வேண்டும். பண பலமோ, அதிகார பலமோ தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்ற நிலை இருக்கக் கூடாது. எங்களைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறுவதைவிட ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் முக்கியமானது. அந்த நிலைப்பாட்டில் கம்யூனிஸ்டுகள் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி: பண பலம், சாதி, மதம் ஆகியவற்றின் ஆதிக்கம் தேர்தல்களில் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் முறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்?
பதில்: இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகமும் பல கட்சி அமைப்பும் இருக்கின்றன. ஆனால் தேர்தல் முறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இந்திரஜித் குப்தா குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற பரிந்துரை மிகவும் முக்கியமானது. தவறு செய்கின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும் உரிமையும் மக்களுக்கு வேண்டும்.இன்றைய தேர்தல் முறையில் 100 வாக்குகளில் 51 வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுகிறார். மீதமுள்ள 49 பேரின் வாக்குகளுக்கு நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூட தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்தியிருக்கிறார். கம்யூனிஸ்டுகள் நீண்ட காலமாக இதற்காகக் குரல் கொடுத்து வருகிறோம். பணம் கொடுத்து, சாதி மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெறுகின்ற நிலை தொடர்ந்தால், கொள்கை களைப் பேசி அரசியல் செய்கின்ற கட்சிகள் எப்படிப் போட்டியிட முடியும்? பணம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்ற நிலை உருவானால் அது எப்படி ஜனநாயகமாகும்? அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகள், திட்டங்கள், லட்சியங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகளைப் பெற வேண்டும். பணக்காரர்கள் மட்டுமே தேர்தலைத் தீர்மானிக்கின்ற நிலை மாற வேண்டும். இதுகுறித்து நாடே சிந்திக்க வேண்டும்.