📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 30, 2026 08:04 PM

ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சைக் கருத்து: தவெக அரசை கண்டித்து செப்.3 அலங்காநல்லூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சைக் கருத்து: தவெக அரசை கண்டித்து செப்.3 அலங்காநல்லூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி

சென்னை: சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டை இழிவாக பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ எம்.வி.கருப்பையாவை கண்டித்து அதிமுக சார்பில் அலங்காநல்லூரில் செப்.3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ எம்.வி.கருப்பையா, தமிழர்களின் பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தவெகவினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, 2017-ம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அதிமுக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 2017-ம் ஆண்டு ஜன.21-ம் தேதி ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அரசு, சட்டப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தரச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

2017-ம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு நல அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு மே.18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு ஜல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு, அதிமுக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம்.

இந்நிலையில், `தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை சீரழிக்கிறது’ என்று பேசிய தவெக எம்எல்ஏ கருப்பையாவையும், தவெக அரசையும் கண்டித்து ஒரங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில், அலங்காநல்லூர் வாடிவாசலில், வரும் செப்.3-ம் தேதி காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஜல்லிக்கட்டு காளைபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு நலச் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.