📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 23, 2026 07:05 PM

ஜூரோங் தீவுக்கு இரண்டாவது இணைப்புச் சாலை கட்டப்படும்

ஜூரோங் தீவுக்கு இரண்டாவது இணைப்புச் சாலை கட்டப்படும்

ஜூரோங் தீவை சிங்கப்பூரின் முதன்மைப் நிலப்பகுதியின் இணைக்கும் வகையில் இரண்டாவது இணைப்புச் சாலை கட்டப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை (ஆகஸ்ட் 23) தமது தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் வோங் இதனை அறிவித்தார்.

தற்போது ஜூரோங் தீவையும் பெருநிலப் பகுதியையும் இணைக்க ஒரு கடற்பாலம் மட்டுமே உள்ள நிலையில், இச்சாலைப்பாதை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், ஜூரோங் தீவிலிருந்து புதிதாக உருவாக்கப்படவுள்ள மேற்குத் தீவுக்கு மற்றோர் இணைப்புச் சாலை கட்டப்படும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் எண்ணெய், ரசாயனத் தொழில்துறையின் மையப்புள்ளியாக இயங்கி வரும் ஜூரோங் தீவு, 2000ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

இத்தீவுக்குச் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் கடற்பாலப் பாதை 1999ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது ஆயர் ராஜா விரைவுச்சாலைக்கு அருகிலுள்ள ஜூரோங் பியர் சாலையையும் ஜூரோங் தீவையும் நேரடியாக இணைக்கிறது.

இந்த கடற்பாலப் பாதையில் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், ஜூரோங் தீவுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்தைத் தடையின்றி நெறிப்படுத்தவும், எதிர்காலத் தேவைகளை எதிர்கொள்ளவும் இரண்டாவது இணைப்புச் சாலை கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.