காமன்வெல்த் 2026: Shot Put F57 பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி வென்று புது ரெக்கார்ட்
காமன்வெல்த் 2026: Shot Put F57 பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளி வென்று புது ரெக்கார்ட்
கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகள் 2026-ன் ஆண்களுக்கான குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் இந்தியாவின் சோமன் ரானா மற்றும் ஷுபம் ஜூயல் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் சோமன் ரானா 13.40 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான ஷுபம் ஜூயல் 13.28 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பிரிவில் இந்தியா பெறும் மூன்றாவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான மும்முறைத் தாண்டுதல்போட்டியில் இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற பிரவீன் சித்ரவேல், இப்போட்டியில் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பிரிவில் ஆண்களுக்கான டி54 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ரமேஷ் சண்முகம் 3:23.59 நிமிடங்களில் இலக்கைக் கடந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
அதேபோல், பெண்களுக்கான 10,000 மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 45:53.93 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து ஏழாவது இடத்தைப் பிடித்தார். இது இந்த சீசனில் அவருடைய சிறந்த நேரமாக பதிவாகியுள்ளது. இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான ரவீனா போட்டி விதிகளின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.