காமன்வெல்த் 2026: திலீப், ஸ்ரீசங்கர் வரலாற்றுச் சாதனை; ஒரே நாளில் 3 பதக்கங்களை அள்ளிய இந்தியா
காமன்வெல்த் 2026: திலீப், ஸ்ரீசங்கர் வரலாற்றுச் சாதனை; ஒரே நாளில் 3 பதக்கங்களை அள்ளிய இந்தியா
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், நேற்று ஒரே நாளில் இந்திய அணிக்கு 1 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
Published : July 30, 2026 at 9:35 AM IST
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆடவருக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி, பதக்கங்களை வாரிக்குவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்றைய தினம் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் 1 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, நேற்று நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் 6 பதக்கங்கள் தற்போதே உறுதியாகியுள்ளன. இதன் மூலம் இத்தொடரில் இந்திய வீரர்கள் தங்களது பதக்க வேட்டையை தொடர்ந்து வருகின்றனர்.
A historic double podium for Bharat! 🥇🥈Heartiest congratulations to Dilip Mahadu Gavit for winning Gold with a Games Record (10.71s) and Mohammed Basil for clinching Silver (10.83s) in the Men's Para 100m T47. Dilip scripting history as the first Indian male para-athlete to… pic.twitter.com/yM7jxhYEwu
இரட்டைப் பதக்கம்
காமன்வெல்த் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் நேற்று இந்திய அணி இரண்டு பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆடவருக்கான 100 மீட்டர் T47 ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் திலீப் மஹது காவிட், பந்தய தூரத்தை வெறும் 10.71 வினாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான முகமது பாசில், 10.83 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இப்போட்டியில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய அணி பிடித்து சாதனை படைத்தது.
ஸ்ரீசங்கர் சாதனை
ஆடவருக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில், இந்தியா வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் காமன்வெல்த் நீளம் தாண்டுதல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய ஆடவர் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் தொடரிலும் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டையில் 6 பதக்கங்கள் உறுதி
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை காலிறுதிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் ஜெய்ஸ்மின் லம்போரியா, சச்சின் சிவாக், சாக்ஷி சௌத்ரி, அருந்ததி சௌத்ரி, அன்குஷ் மற்றும் நரேந்தர் ஆகிய 6 வீரர்களும் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் காமன்வெல்த் குத்துச்சண்டை பிரிவில் மட்டும் இந்தியாவிற்கு மேலும் 6 பதக்கங்கள் கிடைப்பது தற்போதே உறுதியாகியுள்ளது.
Silver, Once Again 🥈 Murali Sreeshankar flies to an 8.09m leap to secure silver in the Men's Long Jump Final, making it two straight Commonwealth Games silvers 🤩Watch the Commonwealth Games Glasgow 2026, LIVE & EXCLUSIVE on Sony Sports Network TV channels & Sony LIV.… pic.twitter.com/KMLHLDlrry
பதக்கப்பட்டியல்
நடப்பு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில், இந்திய அணி தற்போது 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்று 8ஆம் இடத்தில் நீடிக்கிறது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணி 47 தங்கம், 21 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதையும் படிங்க:
கனடா அணி 14 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து அணி 12 தங்கம், 27 வெள்ளி, 17 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் நீடிக்கின்றன. இதனால், வரும் நாள்களில் இந்திய அணி மேலும் பல பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.