காமன்வெல்த் போட்டி 2026: பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்? டாப் 5 இடங்களில் யார்?
காமன்வெல்த் போட்டி 2026: பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம்? டாப் 5 இடங்களில் யார்?
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் போட்டிகளின் 9-வது நாளில், இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் ஜூடோவில் இரண்டு தங்கம் , ஈட்டி எறிதல் மற்றும் ஜூடோவில் இரண்டு வெள்ளி , ஈட்டி எறிதல் மற்றும் டெக்தலாலின் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று இந்திய வீரர்கள் அசத்தினர். இந்த சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகும், பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. மொத்தம் 128 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா இப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஜூடோ போட்டியில் இந்தியாவின் 60 கிலோ எடை பிரிவில் ஹர்ஷ் சிங் மற்றும் 48 கிலோ எடை பிரிவில் அஸ்மிதா டே ஆகியோர் தங்களது பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். இறுதிப்போட்டியில் ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் ஜோசுவா காட்ஸையும், அஸ்மிதா, கனடாவின் ஹெய்டி குவாச்சையும் வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தினர்.
காமன்வெல்த் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பிய இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா, ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல், பெண்கள் 57 கிலோ ஜூடோ பிரிவில் யாமினி மௌரியா வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.
டெக்கத்லான் வீரர் தேஜஸ்வின் சங்கர், ஆடவர் டெக்கத்லான் போட்டியில் வெண்கலம் வென்று, காமன்வெல்த் வரலாற்றில் இப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். ஆடவர் ஈட்டி எறிதலில் யாஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் ஈட்டி எறிதல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இந்திய வீரர்கள் ஒரே நேரத்தில் பதக்க மேடையில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
இதன் மூலம் இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது, ஆஸ்திரேலியா 55 தங்கம், 30 வெள்ளி மற்றும் 43 வெண்கலம் என மொத்தம் 128 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்து அணி 17 தங்கம், 34 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 80 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தய இறுதிப்போட்டியில் கனடாவின் சவன்னா சதர்லேண்ட் வெண்கலப் பதக்கம் வென்றார். கனடா தேசம் 17 தங்கம், 15 வெள்ளி, 21 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து நாட்டின் மேகன் கீத், பெண்கள் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்து 10 தங்கம், 8 வெள்ளி, 16 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நைஜீரியாவின் எசேக்கியேல் நதானியல் தங்கப் பதக்கம் வென்றார். நைஜீரியா 9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதல் ஐந்து இடங்களில் தன் இடத்தை உறுதி செய்துள்ளது.