காங்கிரசின் அழுகிய பிணங்களை சுமந்ததே தோல்விக்கு காரணம்: திமுக செம காட்டம்
சென்னை: 'தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும். இல்லையென்றால், அடக்கப்படும்' என, திமுக தலைமை எச்சரித்துள்ளது.
அக்கட்சியின் அறிக்கை:
கூட்டணியில் இல்லாத கட்சியை நோக்கிக் கூவும் மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்; இல்லையென்றால் அடக்கப்படும். சட்டசபை பொதுத்தேர்தலுக்கு முன், தன் திமிர் பேச்சுகளால், தமிழகத்தில் வலுவாக இருந்த பாஜ எதிர்ப்பு கூட்டணியை சீர்குலைத்த, தவெக அடிமை மாணிக்கம் தாகூர், மீண்டும் தன் வாய்த் துடுக்கை வெளிப்படுத்தி உள்ளார்.
திமுகவின் தோல்விக்கு, வாக்காளர்கள் சிறப்பு திருத்த பணிகளுடன் சேர்த்து, மாணிக்கம் தாகூர், கிரிஷ் ஷோடங்கர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற காங்கிரஸ் புல்லுருவிகள் தெரிவித்த கருத்துக்களும் காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொது வெளியில் கேள்விக்குள்ளானது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து கொண்டே, வேறு கட்சியின், 'ஸ்லீப்பர் செல்'களாக இவர்கள் செயல்பட்டனர். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே கூட்டணி வெற்றிக்காக, உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையை சேர்த்து சுமந்ததும், கட்சியின் ஓட்டுக்கள் சரிய ஒரு காரணமாகி விட்டது. அந்த சுமையை துாக்கி எறிந்த பின், மக்களிடம் கட்சிக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுகளும் அதையே காட்டுகின்றன. 'இண்டி' கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். இண்டி கூட்டணியில் இல்லாத திமுக இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில், இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என, கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை.
மாணிக்கம் தாகூர் சூடு சொரணையுள்ள மனிதராக இருந்தால், 'காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தவெக தலைவர் விஜய், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை' என, கேட்க வேண்டும். பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கி கூவுகிறார்.
அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி, வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. தவெக போடும் பிஸ்கட்டுக்காக, திமுக குறித்து இனி பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதுாறு தொடர்ந்தால், அதற்குரிய விளைவை எதிர்கொண்டே ஆக வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.