📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 26, 2026 12:00 PM

கேரள தவெக தலைவராகிறார் நடிகர் தேவன்: கூட்டணி கட்சியான காங்., காட்டம்

கேரள தவெக தலைவராகிறார் நடிகர் தேவன்: கூட்டணி கட்சியான காங்., காட்டம்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் ஆட்சி செய்யும் கேரளாவில், த.வெ.க.,வை வலுப்படுத்தும் பணியின் முதற்கட்டமாக, அம்மாநில த.வெ.க., தலைவராக நடிகர் தேவன் நியமிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் த.வெ.க., அரசுக்கு காங்., ஆதரவளித்து, அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள த.வெ.க., கேரளாவிலும் கட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதால், அங்கு ஆட்சியில் இருக்கும் காங்., அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த, கேரளாவை சேர்ந்த நடிகர் தேவன், த.வெ.க.,வில் இணைகிறார். பா.ஜ.,வின் கேரள மாநில துணை தலைவராக இருந்த அவர், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், வரும் செப்.,8ல், சென்னையில் த.வெ.க., தலைவரான முதல்வர் விஜயை சந்தித்து, முறைப்படி த.வெ.க.,வில் இணைகிறார். அப்போது, கேரள த.வெ.க., தலைவராக தேவனை நியமிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

இதன் வாயிலாக, காங்., வலுவாக இருக்கும் கேரளாவில் கால் பதித்து, அக்கட்சியின் செல்வாக்கை அசைக்க த.வெ.க., முயற்சிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

'வருங்கால பிரதமர் விஜய்' என, த.வெ.க., வினர் கூறுவதால், எரிச்சலடைந்துள்ள காங்கிரசுக்கு, இது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, தேவன் அளித்த பேட்டி: பா.ஜ.,வில், ஐந்து ஆண்டுகளாக, சும்மாவே இருந்தேன். அக்கட்சியில் இருப்பது எனக்கும், என் மாநிலத்திற்கும் நல்லதல்ல என்பதால் விலகினேன். காங்கிரசில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதை ஏற்கவில்லை.

கடந்த ஆக.,16-ல், விஜய் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. த.வெ.க., பிரதிநிதிகள் என்னுடன் பேசினர். கேரள த.வெ.க., தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டனர்.

விஜய்க்கும் எனக்கும் எண்ணங்கள், மக்கள் மீதான அர்ப்பணிப்பு ஒன்றாக இருக்கிறது. விஜயுடன் ஆறு படங்களில் நடித்துள்ளேன். அவருடன், தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உள்ளது.

கேரளாவில் காங்., கம்யூனிஸ்டுகள், பா.ஜ., கட்சிகள் மீதான அதிருப்தியால், புதிய மாற்றமாக த.வெ.க.,வை இளைஞர்கள் பார்க்கின்றனர். கேரளாவில் த.வெ.க.,வுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார்.