கேரளத்தில் கனமழை; சுற்றுலா தலங்கள் மூடல்
திருவனந்தபுரம்,
தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கினாலும், கேரளத்தில் தொடங்குவதையே பருவமழை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்தவகையில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் எல்நினோ தாக்கம் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
முன்கூட்டியே தொடங்கலாம் என கணிக்கப்பட்ட பருவமழை தாமதமாக 4-ந்தேதி அதாவது நேற்று தொடங்குவதாக ஏற்கனவே ஆய்வு மையம் வானிலை ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. அதன்படி, தென்மேற்கு பருவமழை கேரளம் பகுதிகளில் நேற்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும், தமிழ்நாட்டின் மேற்கு தொடச்சி மலை மற்றும் அதனையொட்டிய இடங்களில் மழைக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வயநாட்டில் நாளை, ஜூன் 7 ஆகிய இரு நாட்கள் சுற்றுலா மையங்கள், ஹோம் ஸ்டே, ரிசார்ட்டை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் 2 நாட்களுக்கு குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கோழிக்கோடு, வயநாட்டில் நாளை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.