📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 05, 2026 11:30 PM

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகள்: பெங்களூருவில் பறிமுதல்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகள்: பெங்களூருவில் பறிமுதல்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகள்: பெங்களூருவில் பறிமுதல்

தற்போது பறிமுதல் செய்யப்பட்டதில் எத்தனை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்டது, மற்ற ஹார்டு டிஸ்க்கள் எந்தெந்த அரசு அலுவலகங்களில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Published : June 5, 2026 at 2:56 PM IST

சென்னை: மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக பெங்களூரு விரைந்த சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார், இதுவரை 34 ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மின்வாரிய தலைமையகமான என்.பி.கே.ஆர்.ஆர். மாளிகையின் 5-வது தளத்தில் இயங்கி வரும் நீர்மின் பிரிவின் (Hydro) உதவி செயற்பொறியாளராக (AEE) மலர்விழி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் இவர், தான் பயன்படுத்தி வந்த அலுவலகக் கணினியில் உள்ள கோப்புகள் அனைத்தும் மாயமானதாக புகார் அளித்தார்.

இதன்பேரில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், கணினியில் இருந்த ஹார்ட் டிஸ்க்குகள் முற்றிலும் காணாமல் போயிருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தின் மிக முக்கியமான மற்றும் ரகசிய கோப்புகள், தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் மலர்விழி புகார் அளித்தார்.

இதன் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் 305 BNS கீழ் திருட்டு வழக்குப்பதிவு செய்து, அலுவலக கணினியில் புகுந்து ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, கணினி பராமரிப்பு பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கணினி ஹார்டு டிஸ்க்குகளையும், மேலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட டிஸ்குகளையும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி கோபிநாத் தனது நண்பர்களுடன் பெங்களூரு சுற்றுலா சென்று போது, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்களை அங்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கோபிநாத்தை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்ற சந்தாதரிப்பேட்டை தனிப்படை போலீசார், அங்கு இவர் விற்பனை செய்த கடையிலிருந்து மொத்தம் சுமார் 34 ஹார்டு டிஸ்க்குளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த 34 ஹார்ட் டிஸ்க்களையும் ஒரே இடத்தில் திருடப்பட்டதா? அல்லது வெவ்வேறு அரசு அலுவலகங்களில் இருந்து திருடப்பட்டதா என்ற கோணத்தில், கோபிநாத்தையும் அந்த ஹார்டு டிஸ்க்களை வாங்கிய கடை உரிமையாளரையும் சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணைக்கு பிறகு கோபிநாத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணை செய்த நீதிபதி, கோபிநாத்தை ஜூன் மாதம் 18ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் மத்திய சிறையில் அவரை அடைப்பதற்காக காவல்துறை வாகனத்தில் போலீசார் அழைத்துச் சென்றனர்.