கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்: சென்னையில் கிருஷ்ணர்
| படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னையில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் கிருஷ்ணர் - ராதை வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலமாகச் சென்றனர்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாளான ‘கிருஷ்ண ஜெயந்தி’ (கோகுலாஷ்டமி), தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள முக்கிய கிருஷ்ணர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
மயிலாப்பூர் நந்தலாலா கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் காலையிலிருந்தே ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலில் மங்கள ஆரத்தி, ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு, தரிசன ஆரத்தி, குருபூஜை மற்றும் மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. நாள் முழுவதும் பக்தர்கள் ஜன்மாஷ்டமி விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்டனர்.
இதேபோல், திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள ஸ்ரீல பிரபுபாதரின் இஸ்கான் ஹரே கிருஷ்ண இயக்கம் சார்பிலும் விழா விமரிசையாக நடைபெற்றது.
சாஸ்திரி நகர் கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கோ பூஜை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தியை உற்சாகமாகக் கொண்டாடினர். கிருஷ்ணர் தங்கள் வீட்டுக்கு நேரில் வருவதாக ஐதீகம் என்பதால், வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதச் சுவடுகளை கோலமிட்டு அழகுபடுத்தினர்.
கிருஷ்ணருக்குப் பிடித்தமான வெண்ணெய், அவல், நாவல் பழம் மற்றும் சீடை, முறுக்கு, அப்பம், லட்டு, தட்டை உள்ளிட்ட பலகாரங்களைப் படைத்து வழிபாடு செய்தனர்.
பண்டிகையின் சிறப்பம்சமாக, பல இடங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை போல வேடமிட்டு மகிழ்ந்தனர்.
எழும்பூர் ஸ்ரீகிருஷ்ண பாலகோகுல நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில், ஏராளமான சிறார்கள் கிருஷ்ணர் - ராதை வேடமிட்டு பங்கேற்றது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
தலைவர்கள் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது
முதல்வர் விஜய்: அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.