கிடப்பில் ஆணைய அறிக்கைகள்... கண்டுகொள்வாரா முதல்வர்?
கிடப்பில் ஆணைய அறிக்கைகள்... கண்டுகொள்வாரா முதல்வர்?
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எரிசாராய முறைகேடு, திருச்செந்தூர் கோயில் அலுவலர் சுப்பிரமணியப்பிள்ளை மரணம் உள்ளிட்ட சம்பவங்களுக்கும் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன.
சர்க்காரியா கமிஷன் குறித்து முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் பேசியதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், சர்க்காரியா விசாரணை குறித்த பழைய சம்பவங்களை சீனியர்கள் அசைபோட, ஜென் ஸி தலைமுறையினர் இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
``சர்க்காரியா ஆணையம் மட்டுமல்ல... தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் அமைத்த பெரும்பாலான விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சில அறிக்கைகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதுகூடத் தெரிவிக்கப்படவில்லை’’ என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
“மக்களின் கோபத்தைச் சமாளிக்கவும், எதிர்க்கட்சிகள்மீது பழிபோடவும், தீர்க்க விரும்பாத பிரச்னைகளைக் கிடப்பில் போடவும் ஆட்சியாளர்கள் கையிலெடுக்கும் ஆயுதம்தான் விசாரணை ஆணையம். இதுதான் காலங்காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறையாக இருக்கிறது.
1976-ல் தி.மு.க ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் ஆணையம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; அறிக்கையை நிராகரிக்கவுமில்லை. ஆணையம் அமைத்த காங்கிரஸே சில ஆண்டுகளில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது.
2020-ல் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகாரை விசாரித்த நீதிபதி கலையரசன் ஆணையத்தின் அறிக்கை தி.மு.க ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன், ஆறுமுகசாமி ஆணையங்களின் அறிக்கைகளும் முதல்வராக இருந்த ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் பிறகு அவற்றின் நிலை என்ன என்பது தெரியவில்லை.
2022-ல் ஐந்தாவது காவல் ஆணையத்தை அமைத்த ஸ்டாலின், 2024-ல் கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தையும் அமைத்தார். 2025-ல் கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இப்படி மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் அமைத்த பெரும்பாலான ஆணையங்களின் பரிந்துரைகளை ஏற்று, அரசு எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் வேதனை. அரசுக்கு பாதிப்பில்லாத சில அறிக்கைகள் மட்டும் முழுமையாக ஏற்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் சில அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றபடி எல்லாமே ஆவணக் காப்பகத்தில், பத்திரமாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய்யாவது, ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.
விசாரணை ஆணையங்கள் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வரும் எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கதிரிடம் பேசியபோது, “தமிழகத்தில் அமைக்கப்பட்ட பல ஆணையங்கள் முழுமையான தீர்வை வழங்கவில்லை. ஆட்சியாளர்கள் ஆணைய அறிக்கைகளை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களுக்குச் சாதகமாக இருந்தால் பரிந்துரைகளை ஏற்பதும், எதிராக இருந்தால் கிடப்பில் போடுவதுமே வாடிக்கை.
கொடியன்குளம், தாமிரபரணி, பரமக்குடி சம்பவங்கள் தொடர்பான ஆணையங்கள் காவல்துறைக்கு ஆதரவாகப் பரிந்துரை வழங்கியிருந்தன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, பள்ளி மாணவர்களிடம் நிலவும் சாதிப் பாகுபாடு குறித்த சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. அதேபோல, கிரானைட் முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் ஆணையத்தின் பரிந்துரைகளையும் அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
பிரச்னைகளை அரசே நேரடியாகத் தீர்க்க அதிகாரம் இருக்கும்போது, எல்லாவற்றுக்கும் விசாரணை ஆணையம் தேவையில்லை. பஞ்சமி நில மீட்பு, ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் போன்ற முக்கியப் பிரச்னைகளுக்கு அரசே நடவடிக்கை எடுக்கலாம்.
ஆணையங்களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து இல்லாததாலேயே, ஆணைய அறிக்கைகளுக்கு அரசுகள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட ஆணைய அறிக்கைகள் ரகசியமாக வைக்கப்படுவதற்காக அல்ல” என்றார்.
மேனாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், விசாரணை ஆணையங்களில் ஆணையராகப் பங்கேற்றவருமான கே.சந்துருவிடம் கேட்டபோது, “1958-ல் பங்குச் சந்தை ஊழல் குறித்து நீதிபதி சாக்ளா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையால், சம்பந்தப்பட்ட அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய நேர்ந்தது. இதுபோல் அரிதாகச் சில ஆணையங்களின் பரிந்துரைகளால் பயன் கிடைத்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் ஆணையப் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன. ‘பிரச்னைகளைத் தீர்க்காமல் இருக்க கமிஷன் போடு’ என்று ராஜாஜி ஒருமுறை கூறினார். முன்பெல்லாம் `ஒரு பிரச்னைக்கு விசாரணை ஆணையம் வேண்டும்’ என்று மக்கள் கேட்பார்கள். இப்போது, குறிப்பிட்ட நீதிபதி தலைமையில் ஆணையம் வேண்டும் என்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நடுநிலை மீது மக்களுக்கு எத்தனை நம்பிக்கை பாருங்கள்.
நான் பங்கேற்ற ஆணையப் பரிந்துரையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சிறார் இல்லங்கள் குறித்த பரிந்துரைகளில் துறையின் பெயர் மாற்றப்பட்டதைத் தவிர, வேறு எதுவும் நடக்கவில்லை. இனியாவது ஏதேனும் நடக்கிறதா என்று பார்ப்போம்” என்றார்.
ஆணையங்களை அமைத்தால் மட்டும் போதாது; அவற்றின் பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுவதுதான் நல்ல அரசுக்கான அடையாளம்!
சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்!
``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிகாரிகள்மீது கடந்த தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்ட, “துணிவிருந்தால் நீங்கள் தண்டியுங்களேன்்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 2018, மே 22-ல் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரித்து, 2022-ல் அறிக்கை தாக்கல் செய்தது. `துப்பாக்கிச்சூடு தற்காப்புக்காக நடத்தப்படவில்லை’ என்றும், `சம்பவத்துக்குக் காவல்துறை, வருவாய்த்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே பொறுப்பு’ என்றும் ஆணையம் தெரிவித்தது. சம்பந்தப்பட்டவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கையுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப் பரிந்துரைத்தது. ஆனால், `கடந்த ஆட்சியில் பரிந்துரை நிறைவேற்றப்படாத நிலையில், தற்போதைய அரசாவது நிறைவேற்ற வேண்டும்’ என்ற குரல் எழுந்திருக்கிறது.
- இ.கார்த்திகேயன், படம்: ரா.ராம்குமார்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்... அதிகாரிகளைக் கட்டம் கட்டிய ஆணையம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குக் காவல்துறை, கலால்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கோகுல்தாஸ் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் 2024, ஜூன் 19-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 24 மணி நேரத்துக்குள் 67 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின். பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள், காவல்துறை, வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்திய ஆணையம், செப்டம்பர் 8-ம் தேதி சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், ‘கள்ளச்சாராய மரணங்களுக்குக் காவல்துறை, கலால்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமும் மெத்தனப் போக்கும் காரணம். கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது தெரிந்தும் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கருணாபுரம் சம்பவம் குறித்து 26.06.2024 தேதியிட்ட ஜூ.வி கவர் ஸ்டோரியில், ‘தாலியறுக்கும் கள்ளச்சாராய மரணங்கள்… கள்ள காவல்துறை… கண் மூடி அரசு…’ என்ற தலைப்பில், காவல்துறை செயல்படாதது மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, உளவுத்துறை, உள்ளூர் போலீஸாரின் மாமூல் வசூல் குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.
அதை உறுதிப்படுத்தும்விதமாக, கள்ளச்சாராய வியாபாரிகளிடம் போலீஸார் மாமூல் வாங்கியதற்கான ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைப்பற்றினர். கள்ளக்குறிச்சி உட்கோட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட அந்த மாமூல் பட்டியல் ஜூ.வி-க்குப் பிரத்யேகமாகக் கிடைத்தது.
அதில் கள்ளச்சாராய வியாபாரிகளின் பெயர்கள், செல்போன் எண்கள், ஊர், மாமூல் தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. முக்கியக் குற்றவாளியான கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜனின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. அந்தப் பட்டியலை 07.07.2024 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்… பட்டியல் போட்டு வசூலிக்கப்பட்ட மாமூல்… அம்பலமான காவல்துறை அதிகாரிகள்!’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
ஜூ.வி அம்பலப்படுத்திய காவல்துறையின் அலட்சியம் மற்றும் மாமூல் வசூல் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில், அதிகாரிகளைக் கடுமையாகச் சாடியிருக்கிறது கோகுல்தாஸ் ஆணையம்.
மூடி மறைக்க நினைத்த கொடூரம்... நீதியின் வாசலைத் திறந்த பாமதி கமிஷன்!
1991-ல் தருமபுரி மாவட்டம், வாச்சாத்தியில் பழங்குடியின மக்கள் காவல்துறை, வனத்துறையினரால் சித்ரவதைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளான கொடூரம் அரங்கேறியது. அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு, இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், சி.பி.எம் கட்சியினர் இந்தக் கொடூரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தனர்.
மக்கள் போராட்டமும், நீண்ட சட்டப் போராட்டமும் தொடர்ந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்போது தென்மண்டல எஸ்.டி -எஸ்.சி கமிஷனராக இருந்த பாமதி ஐ.ஏ.எஸ் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் வாச்சாத்தியில் நடந்த கொடூரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் பல ஆண்டுகள் நீடித்த வழக்கில், இறுதியாக 215 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது.
வாச்சாத்தி கொடூரம் வரலாற்றில் புதைக்கப்பட்டுவிடாமல், நீதிமன்றத்தின் வாசலை எட்டியதற்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது பாமதி ஐ.ஏ.எஸ் தலைமையிலான அந்த விசாரணை கமிஷன்தான்!