ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மதுரை: ''ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30வருடம், 40 வருடம் சர்ச்சை '' என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருக்கா; கைதான எல்லோரும் ஆதாரம் வைத்து இருக்கிறார்கள். ஒருவர் கைது ஆகியிருந்தால் டிடென்ஷன் காப்பி காட்ட வேண்டும்; டிடென்ஷன் காப்பி இல்லாத ஒரே தியாகி இவராக தான் இருப்பார் போல.
இவ்வளவு பெரிய தியாகி கைது செய்யப்பட்டார் என்றால் எதுக்கு டிடென்ஷன் காப்பி அழிக்கப்பட்டது. எல்லோரும் சொல்கிற குற்றச்சாட்டு 1989ல் அவர் ஆட்சி காலம் வந்த பிறகு அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்க கூடாது என்று அழித்துவிட்டார்கள் என்று சொல்கிறாங்க.
எத்தனை 100 கோடி ரூபாய் கொண்டு வந்தாலும் மக்கள் அதை வாங்கிட்டு, என்ன செய்ய வேண்டுமோ, அதை தெளிவாக செய்வார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இவர்கள் எல்லாம் எங்கே இருந்து கொள்ளை அடித்தார்கள்; எத்தனை லட்சம் கோடி ரூபாய் தமிழகத்தில் இருந்து கொள்ளை அடித்தார்கள்.
டெபாசிட் கிடைக்காது
மக்கள் அவர்களை தமிழகத்தில் இருந்து தூக்கி எறிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. தமிழக முதல்வர் லண்டனுக்கு சென்று இருப்பது தொழிற்துறைக்கான ஒரு கூட்டம் ஒவ்வொரு நாளும் நிறைய தொழில்துறையினரை சந்திக்கிறார். முதலீட்டு ஒப்பந்தம் குறித்து சந்திப்பு முடிந்த பிறகு அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.