கலைஞர்களின் வளர்ச்சிக்கான தமிழ் நாடக விழா அங்கங்கள்
சிங்கப்பூரின் முதல் அனைத்துலக தமிழ் நாடக விழாவாக நடந்தேறிய ‘நாடகமிக்’ விழாவில் ஐந்து வெளிநாட்டு நாடகங்கள், மூன்று சிங்கப்பூர் நாடகங்கள் ஆகியவை மட்டுமன்றி வளர்ந்துவரும் கலைஞர்களுக்கும் அனைத்து வயதிலான நாடக ஆர்வலர்களுக்கும் பல்வேறு அங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அகம் நாடகக்குழுவின் ஏற்பாட்டில் நிகழ்ச்சிகளும் பயிலரங்குகளும் ஆகஸ்ட் 20லிருந்து 30 வரை நடந்த விழாவில் இடம்பெற்றன.
தெருக்கூத்து 101
ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆர்ட்ஸ் ஹவுசில் நடந்த பயிலரங்கை இந்தியாவிலிருந்து வந்திருந்த தெருக்கூத்துப் பட்டயக் கல்வியாளர் தமிழரசி வழிநடத்தினார்.
தெருக்கூத்தை முறையாகக் கற்க பல்லாண்டுகள் வரை எடுக்கலாமென கூறிய அவர், அதன் அடிப்படைக் கூறுகளை மட்டும் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அரைத் துள்ளல், முழுத் துள்ளல், கிரிக்கி ஆகிய மூன்று முக்கிய நகர்வு வித்தைகளை அவர் கற்பித்து அனைவரையும் அதைச் செய்துபார்க்க வைத்தார்.
அத்துடன், கவனத்தைக் கூர்மையாக்கும் சில விளையாட்டுகளிலும் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டனர்.
தெருக்கூத்தின் வரலாற்றையும் அதன் பரிணாமத்தையும்பற்றி விளக்கியதுடன், பங்கேற்பாளர்கள் தெருக்கூத்திற்கான ஒப்பனையையும் ஆடைகளையும் அணிந்து தெருக்கூத்துக் கலைஞர்களாக மாறும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
விண்மீன்கள்
மாணவர்கள் எவ்வாறு தங்கள் உடல் அசைவுகளைக் கட்டுப்படுத்தலாம், எவ்வாறு நடிக்கலாம், தன்னம்பிக்கையுடன் பேசலாம் எனப் பல திறன்கள் கற்பிக்கப்பட்டன.
துடிப்பான விளையாட்டுகளை உள்ளடக்கிய பயிலரங்கு, மாணவர்கள் எவ்வளவு நேரம் வரையில் கவனம் செலுத்த முடிகிறது என்பதைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பயிலரங்கில் கலந்துகொண்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதன் முடிவில் சிறிய நாடகம் ஒன்றை மேடையேற்றினர்.
தி ஆர்ட் ஆஃப் மைக்ரோ டிராமா
குறுநாடகங்களை எழுத ‘டம்மீஸ் டிராமா’ குழுவைச் சேர்ந்த ஸ்ரீவத்சன், ஆர்ட்ஸ் ஹவுஸ் வளாகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பங்கேற்பாளர்களுக்குக் கற்பித்தார்.
மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு கதை எழுதுவது, சுற்றியுள்ள மக்களின் தன்மைகளைக் கதாபாத்திரங்களில் பொருத்துவது, குறைந்த நேரத்தில் கருத்துகளை நிறைவாகக் கூறுவது போன்ற பல்வேறு முக்கியத் திறன்களை அவர் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
கதையில் நாடகப்படுத்தப்படக்கூடிய அங்கங்களுடன், நகைச்சுவை, பதற்றம் போன்ற உணர்வுகள் இருப்பதன் அவசியத்தையும் அவற்றை எவ்வாறு எழுத்தில் கொண்டுவருவது என்பதையும் அவர் கற்பித்தார்.
வசனங்கள் எழுதுவது, எளிமையான ஒளி, ஒலி வடிவமைப்பின்வழி கருத்துகளைக் கடத்துவது, பார்வையாளர்களின் கற்பனையைப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றையும் அவர் பயிலரங்கில் குறிப்பிட்டார்.
பயிலரங்கின் இறுதியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு சிறுகதையை எழுதியிருந்தனர்.
சூரரைப் போற்று, கல்கி 2898 ஏடி திரைப்படங்கள் புகழ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தேறிய ‘கிலவ்னிங்’ பயிலரங்கு பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கியது.
லிட்டில் தியேட்டர் நாடகக்குழு ஆர்ட்ஸ் ஹவுசில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடத்திய பயிலரங்கின் பயிற்றுவிப்பாளர்களில் ‘சார்பட்டா பரம்பரை’, ‘மதராஸி’ திரைப்படங்கள் புகழ் ஷபீர் கள்ளரக்களும் ஒருவர்.
வசனமேதுமின்றி முகபாவம், உடல் அசைவு, ஓசை போன்றவற்றின் வாயிலாக வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனைப் பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்பாளர்களுக்குக் கற்பித்தனர்.
நடிகர்கள் மட்டுமன்றி பலருக்கும் மேடையில் நிற்கும்போது இருக்கும் அச்சத்தையும் தயக்கத்தையும் கடந்து எவ்வாறு மகிழ்ச்சியோடு நடிக்கலாம் என்பதைப் பயிலரங்கு கற்பித்தது.
கிலவ்னிங் படைப்புகள் மருத்துவமனையில் நோயாளிகளை மகிழ்விக்கும் நோக்குடன் அதிகம் செய்யப்படுவதாகப் பயிற்றுவிப்பாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.
மருத்துவமனைகளில் அத்தகைய படைப்புகளைச் செய்யும்போது கருத்தில் கொள்ளவேண்டிய உத்திகள் பற்றியும் கற்பிக்கப்பட்டன.
இப்பயிலரங்கிற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘த லிட்டில் தியேட்டர் குழு விவா;- பல்கலைக்கழக சிறார் புற்றுநோய் நிலையத்திலிருந்த சிறார்களுக்காகவும் மருத்துவ ஊழியர்களுக்காகவும் கிலவ்னிங் படைப்பு ஒன்றைப் படைத்தது.
நடிப்புப் பயிலரங்கு
லிட்டில் தியேட்டர் குழு ஆர்ட்ஸ் ஹவுசில் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடத்திய நடிப்பு பட்டறையைக் கிருஷ்ணாகுமார் வழிநடத்தினார்.
பங்கேற்பாளர்களுக்குத் துடிப்பூட்ட சில விளையாட்டுகளுடன் தொடங்கிய பயிலரங்கு முக்கிய நடிப்பு உத்தி பயிற்சிகளுடன் முடிவடைந்தது.
மனிதர்கள் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஏற்ப மூச்சு உள்வாங்கி விடும் விதமும் மாறுவதாகச் சுட்டிய கிருஷ்ணகுமார், மூச்சுப் பயிற்சிகளைப் பயன்படுத்தி நடிகர்கள் எவ்வாறு பல்வேறு உணர்வுகளைப் படைத்துக் காட்டலாம் என்பதைக் கற்பித்தார்.
மூச்சின் வழி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் சோகத்தை வெளிப்படுத்திக் கண்ணீர் வரவழைக்கவும் அவர் வழிகளைக் கற்பித்தார்.
மேலும், மேடையில் தன்னம்பிக்கையுடன் நிற்பது, நடிப்பது போன்றவையும் பயிலரங்கில் கற்பிக்கப்பட்டன.
நாடகவாதி கருத்தரங்கு
ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ‘நாடகவாதி’ கருத்தரங்கு ‘லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்’ என்ற தலைப்புடன் நடந்தேறியது.
மொழி, அடையாளம், பல கலாசாரங்களைக் கொண்ட சிங்கப்பூரில் மேடை நாடகத்துறையின் எதிர்காலம் ஆகிய கருப்பொருள்கள் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டன.
கருத்தரங்கில் எழுத்தாளர், நடிகர், இயக்குநர் கார்த்திகேயன் சோமசுந்தரம், நாடகக் கலைஞர் கிரேஸ் கலைச்செல்வி, கலாசாரப் பதக்கம் பெற்ற ‘டிராமா பாக்ஸ்’ குழு நிறுவனர் கோக் ஹேங் லியுன், பல்கலை வித்தகர் நூர் எஃபண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக வருகை ஆய்வாளர் டாக்டர் வித்யா சுப்பிரமணியம் கருத்தரங்கை வழிநடத்தினார்.
சிங்கப்பூர் நாடகத்துறையில் பெண்களின் பங்கு குறைவாகப் பதிவாகியுள்ளது, பல கலாசாரங்களை தனித்தனியாகப் படைப்பதற்கும் இணைத்துப் படைப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் போன்ற தகவல்கள் பார்வையாளர்களுடனான கேள்வி-பதில் அங்கத்தில் இடம்பெற்றன.
பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஈடுசெய்யும் வகையில் ரசிகர்களுக்காகவும் கலைஞர்களுக்காகவும் ‘நாடகமிக்’ பல்வேறு வகையான நாடகங்களையும் பயிலரங்குகளையும் வழங்கியதாக அகம்’ நாடகக் குழுவின் தலைவரும் ‘நாடகமிக்’ விழாவின் ஒருங்கிணைப்பாளருமான கணேஷ் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
“அனைவருக்கும் ஏதேனும் ஓர் அம்சமாவது பிடித்து அதில் அவர்கள் பார்வையாளர்களாகவோ பங்கேற்பாளர்களாகவோ கலந்துகொள்ள முன்வர வேண்டுமென்பதற்காக விழா வடிவமைக்கப்பட்டது,” என்று திரு கணேஷ் கூறினார்.