ஊழல் ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: சவுமியா அன்புமணி பேச்சு
ஊழல் ஒழிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: சவுமியா அன்புமணி பேச்சு
சென்னை: ஊழல் ஒழிப்பின் பயன் மக்களைச் சென்றடைய வேண்டும். மகளிருக்கான இலவச பேருந்து சேவை தனியார் பேருந்துகளிலும் நீட்டிக்கப்படுமா என்று பேரவையில் சவுமியா அன்புமணி பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று போக்குவரத்து, பொதுத்துறை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, மாநில சட்டமன்றம், ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தர்மபுரி தொகுதி உறுப்பினர் சவுமியா அன்புமணி (பாமக) பேசியதாவது:
ஊழல் கண்காணிப்பாளர்களை விரைவாக நியமிக்க வேண்டும். அப்போது தான் விசாரணைகள் வேகமாக நடைபெறும். சேவை உரிமை பெறும் சட்டம் எவ்வளவு விரைவாக செயல்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் தான் ஊழல் ஒழிப்பிற்கு அர்த்தம் இருக்கும்.
ஊழல் ஒழிப்பின் தாக்கத்தை மக்கள் உணர வேண்டும். உதாரணமாக மின்சாரத் துறையில் ஊழல் ஒழிக்கப்பட்டால் மின் கட்டணம் குறைய வேண்டும். கல்வித்துறையில் ஊழல் ஒழிந்தால் கல்விக் கட்டணம் குறைய வேண்டும். இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அந்த ஊழல் ஒழிப்பின் பயன் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும். இதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுவதுமாக நேரலை செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்கள் அனைவரும் ஆண்டிற்கு ஒருமுறை தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வர். பொது வாழ்வில் நேர்மையை கொண்டு வரும். இதனை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கொண்டு வரலாம். தர்மபுரி மாவட்டத்தின் குடிநீரில் புளோரசிஸ் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த நீரை சுத்தப்படுத்துவதற்கு ஆர்.ஓ போடக்கூடாது என்று புதிதாக ஒரு தகவலை சொல்கிறார்கள். அது ரொம்ப கஷ்டம். ஆர்.ஓ போடுவதற்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் 105 அகதிகள் முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் 57 ஆயிரம் ஈழத்தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கிராமங்களில் மினி பேருந்துகள் விட வேண்டிய கோரிக்கைகள் இருக்கின்றன. மகளிருக்கான இலவச பேருந்து சேவை தனியார் பேருந்துகளிலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது. அதேசமயம் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது ஒன்றே சமூக நீதிக்கான தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.