📅 Friday, 21 August 2026 IST | ஆவணி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 20, 2026 07:00 PM

கணினி விளையாட்டு, ஆபாசக் காணொளிகள், சூதாட்டத்துக்கு அடிமையானவர்களுக்கு உதவி

கணினி விளையாட்டு, ஆபாசக் காணொளிகள், சூதாட்டத்துக்கு அடிமையானவர்களுக்கு உதவி

கணினி விளையாட்டு, ஆபாசக் காணொளிகளைப் பார்ப்பது, சூதாட்டம் ஆகிய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு உதவும் அமைப்புகளை விரிவுபடுத்த, தேசிய சமூக சேவை மன்றம் $5.6 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

‘எஸ்பயர்’ எனப்படும் சேர்த்துக்கொள்ளப்படுவது, குணப்படுத்துவது மற்றும் வலுப்பெறச் செய்வது ஆகியவற்றுக்கான திட்டத்துக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குச் செலவு செய்ய, சிலவகை பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டத்தின்கீழ் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

2020ஆம் ஆண்டில் 520க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவான நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 50 விழுக்காடு அதிகரித்து 780க்கும் மேலாகப் பதிவாகியுள்ளது.

நடத்தை சார்ந்த, சிலவகை பழக்கவழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு ஒரு முக்கிய தேவையாக உருவெடுத்துள்ளதைக் கண்டறிந்த மன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தொடக்கத்திலேயே சரியான ஆதரவைப் பெற சமூக சேவை முகமைகளின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

ஏற்கெனவே ‘வி கேர் கம்யூனிட்டி சர்வீசஸ்’ அமைப்புக்கு நிதி வழங்கி வரும் நிலையில், ‘எஸ்பயர்’ திட்டத்தின் மூலம் மேலும் ஒன்பது அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

தோ பாயோ லோரோங் 4ல் உள்ள கேர் கார்னர் ஆலோசனை மையம், ஹாங் லிம் காம்பிளக்சில் உள்ள ஆலோசனை மற்றும் பராமரிப்பு மையம், புக்கிட் பாத்தோக்கில் உள்ள பீபிஐஎஸ் சமூக சேவை மையம் (மேற்கு), ஜூரோங் பாயிண்ட் வணிக வளாகத்தில் உள்ள சேஜ் ஆலோசனை மையம் மற்றும் பெட்டிர் சாலையில் உள்ள தாய் ஹுவா கான் மோரல் சாரிட்டிஸ் உள்ளிட்ட 10 அமைப்புகள் இத்திட்டத்தின்கீழ் செயல்படும்.

அத்துடன், இந்த அமைப்புகளில் உள்ள குறைந்தது நான்கு ஆலோசகர்களாவது தொடக்கநிலைத் தலையீட்டுச் சேவைகளை வழங்கக்கூடிய வகையில், அவர்களுக்கு மறுவாழ்வு ஆலோசனைகளுக்கான பயிற்சிகளை ‘வி கேர்’ அமைப்புடன் இணைந்து மன்றம் வழங்கும்.