ஒரு பைசா செலவில் தங்க மோதிரம்; தாய்மாமன் திட்ட டெண்டரை கைப்பற்றிய 2 நிறுவனங்கள்
சென்னை : தமிழக அரசின், 'தாய்மாமன்' தங்க மோதிர திட்ட டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன.
'அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்' என, முதல்வர் விஜய் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பாக, ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்கு, தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 22 காரட் தங்கம், அரசால் வழங்கப்படும்.அதை பயன்படுத்தி, மோதிரங்கள் செய்து வழங்குவதற்காக, பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஜூலை 17ம் தேதி, 'டெண்டர்' வெளியிடப்பட்டது.
இன்று திறக்கப்பட்ட அந்த டெண்டரில், 11 முன்னணி தங்க விற்பனை நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், தங்கம் தவிர, செய்கூலி, 'ஹால்மார்க், பேக்கிங்' மற்றும் காப்பீடு என எல்லாவற்றையும் சேர்த்து, வெறும் ஒரு காசு மட்டுமே மோதிரம் செய்வதற்கான செலவு என, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருந்தது.
தமிழக ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளி சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்ற பிற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரப்பட்டது. அதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்தது.
இதன்படி, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஜுன் மாதத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு 1,28,499 தங்க மோதிரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
டெண்டரில் பங்கேற்ற ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் 410.97 ரூபாய், உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் 822.97 ரூபாய், டைட்டன் கம்பெனி 832.24 ரூபாய், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட், 871.38 ரூபாய், எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி 947.60 ரூபாய், கே.டி.எம்., ஜூவல்லரி 964.08 ரூபாய், மோகன்லால் ஜூவல்லர்ஸ் 977.47 ரூபாய், கல்யாண் ஜூவல்லர்ஸ் 978.50, ஜவரி அண்ட் கம்பெனி 1,325.61 ரூபாய், சரவணா ஸ்டோர்ஸ் ஜூவல்லரி 15,356.27 ரூபாய் கோரி இருந்தன.
அரசு வெளியிட்ட டெண்டரில், தங்க மோதிரம் 12.4 மி.மீ., விட்டமும், கூர்மையாக இல்லாமல், பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரை, என்.யு.ஐ.டி., எண்ணுடன் தயாரிக்கப்பட வேண்டும். மோதிரத்தை 'பிளிஸ்டர் கார்டு' மூலம் 'பேக்' செய்து, அரசின் முத்திரையுடன் வினியோகிக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.