கோப்பை வென்றது கோவை: பைனலில் மதுரை ஏமாற்றம்
சென்னை: டி.என்.பி.எல்., தொடரில் கோவை அணி கோப்பை வென்றது. பைனலில், 84 ரன் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது.
தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 10வது சீசன் நடந்தது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பைனலில் மதுரை, கோவை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி கேப்டன் ஷாருக்கான், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
கோவை அணிக்கு ராதாகிருஷ்ணன், சுரேஷ் லோகேஷ்வர் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. விக்னேஷ் வீசிய முதல் ஓவரில் லோகேஷ்வர் ஒரு சிக்சர் அடித்தார். குர்ஜப்னீத் சிங் பந்தில் ராதாகிருஷ்ணன், ஒரு சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 34 ரன் சேர்த்த போது சரவணன் 'சுழலில்' லோகேஷ்வர் (11) போல்டானார். ராதாகிருஷ்ணன் (13) நிலைக்கவில்லை.
சித்தார்த் அரைசதம்: பின் இணைந்த சச்சின் பாலசுப்ரமணியம், ஆன்ட்ரி சித்தார்த் ஜோடி நம்பிக்கை தந்தது. விக்னேஷ் வீசிய 11வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார் சச்சின். அபாரமாக ஆடிய சித்தார்த், 33 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய சித்தார்த், பெரியசாமி, ரோஹன் ஓவரில் தலா 2 சிக்சர் பறக்கவிட்டார். நான்காவது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்த போது சரவணன் பந்தில் சச்சின் (39) அவுட்டானார். கேப்டன் ஷாருக்கான் (1), அம்பிரிஷ் (6), தீபன் லிங்கேஷ் (1) நிலைக்கவில்லை. ஆன்ட்ரி சித்தார்த், 47 பந்தில் 82 ரன் (5X6, 7X4) விளாசினார்.
கோவை அணி 20 ஓவரில் 182/7 ரன் எடுத்தது. மாதவ பிரசாத் (13), கிஷோர் (2) அவுட்டாகாமல் இருந்தனர். மதுரை அணி சார்பில் சரவணன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
மதுரை ஏமாற்றம்: சவாலான இலக்கை விரட்டிய மதுரை அணிக்கு ராம் குமார் (0), சித்தார்த் மகாதேவன் (0) ஏமாற்றினர். சதுர்வேத் (40), ஹரி ராகவேந்திரா (24), கேப்டன் பாலசந்தர் அனிருத் (24) ஓரளவு கைகொடுத்தனர். சோயப் முகமது கான் (1) சோபிக்கவில்லை. கேப்டன் ஷாருக்கான் 'வேகத்தில்' அதீக் (1), குர்ஜப்னீத் சிங் (2) அவுட்டாகினர். சித்தார்த் மணிமாறன் பந்தில் சரவணன் (3), ரோஹன் புத்ரா (0) ஆட்டமிழந்தனர்.
மதுரை அணி 14.2 ஓவரில் 98 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கோவை சார்பில் சித்தார்த் மணிமாறன், ஷாருக்கான் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
கோவை அணி 3வது முறையாக (2022, 2023, 2026) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.