கொத்தடிமை முறை சிங்கப்பூரில் இல்லை: ஃபூ செ சியாங் விளக்கம்
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அல்லது தலைமையகத்தைக் கொண்டுள்ள நிறுவனங்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ கொத்தடிமை நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளதாக எந்தவொரு தகவலும் பெறப்படவில்லை என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஃபூ செசியாங் தெரிவித்துள்ளார்.
ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அத்தகைய தகவல் கிடைத்தால், சந்தேகிக்கப்படும் நிறுவனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
கொத்தடிமை நடைமுறை மூலம் தயாரிக்கப்பட்ட பொருள்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால், அமெரிக்காவால் 10 முதல் 12.5 விழுக்காடு வரை வரி விதிக்கப்பட்ட பல நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.
சிங்கப்பூர் அத்தகைய வணிகத்தில் ஈடுபடவில்லை. ஆனால் கொத்தடிமை முறை மூலம் தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதியைத் தடைசெய்யும் தனிச் சட்டம் இல்லாததால் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூர் கொத்தடிமை முறையை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பல்வேறு சட்டங்களின் கீழ் அதனைக் குற்றமாகக் கருதுகிறது என்று சுட்டிய திரு ஃபூ, சிங்கப்பூர் நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் நாடுகளின் சட்டதிட்டங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.