📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 07:34 PM

பணத்துக்கு முக்கியத்துவம் அளித்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன்: டான் சீ லெங்

பணத்துக்கு முக்கியத்துவம் அளித்திருந்தால் அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன்: டான் சீ லெங்

பணத்துக்கு முக்கியத்துவம் அளித்திருந்தால், தாம் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டிருக்க மாட்டேன் என்று வர்த்தக, தொழில் (எரிசக்தி, தொழில்) அமைச்சர் டான் சீ லெங் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் சம்பளம் தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றிய அவர், தனியார் துறையிலிருந்து விலகி பொதுச்சேவையில் இணைந்ததில் தாம் செய்த தனிப்பட்ட, நிதிசார் தியாகங்கள் குறித்து விவரித்தார்.

தமக்கு இவ்வளவு வழங்கி வளர்த்தெடுத்த நாட்டுக்கும் மக்களுக்கும் பதிலுதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே தம்மை அரசியலுக்கு வரத் தூண்டியதாக 61 வயது டாக்டர் டான் கூறினார்.

மருத்துவராகப் பணியாற்றிய இவர், 2020ஆம் ஆண்டில் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகச் சுகாதாரத் துறையில் பல உயர் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்.

சிங்கப்பூரின் அரசியல் பதவிகளில் இருப்பவர்களின் சம்பளம் ஒன்பது விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைச்சர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பொதுச்சேவைக்கு வருமாறு கேட்கப்படுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் கணிசமான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவிகளும் பிள்ளைகளும் சில தியாகங்களைச் செய்ய நேரலாம் என்றும் அமைச்சர் டான் சுட்டினார்.

தனிப்பட்ட முறையில் நேரத்தையும் எதிர்கால வாய்ப்புகளையும் தனிப்பட்ட இலக்குகளையும் தனிப்பாதுகாப்பையும் நிதிசார் பலன்களையும் கைவிட அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர், பலர் நாட்டின் அழைப்பை ஏற்பார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இருப்பினும், இழந்தவற்றின் மொத்த கூட்டுத்தொகை மிக அதிகம் என்று சிலர் முடிவு செய்யக்கூடும். அவ்வாறு அடிக்கடி நிகழ்ந்தால் அது சிங்கப்பூருக்கே இழப்பாக முடியும். சேவை செய்யும் மனம் இல்லாததால் அவர்கள் வர மறுப்பதில்லை, மாறாக அவர்கள் செலுத்தவேண்டிய தனிப்பட்ட விலை மிக அதிகமாக இருப்பதுதான் காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

அரசியலுக்கு வருவதற்கு முன் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியார் துறையில் பணியாற்றிய டாக்டர் டான், அரசாங்கத்தில் சேர்வதற்கு முன்பு தாம் ஈட்டிய வருமானத்திற்கோ அல்லது தனியார் துறையிலேயே தொடர்ந்திருந்தால் ஈட்டியிருக்கக்கூடிய வருமானத்திற்கோ எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான அமைச்சரின் சம்பளமும் ஈடாக முடியாது என்று வலியுறுத்தினார்.