கர்நாடகா தமிழர்கள் கொலை: சிஐடி விசாரணைக்கு மாற்றம்
பெங்களூரு: கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் மிகவும் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று உடற்கூராய்வுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், லாசர் டேவிட் குமார் ஆகிய மூவரும் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்துப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கிராமத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மான் வேட்டையாட வந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தற்காப்பிற்காகத் திருப்பிச் சுட்டதாக வனத்துறை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் வனத்துறை வெளியிட்ட புகைப்படத்தில் இடம்பெற்ற புதிய காலணி பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இவ்வழக்கின் நேரடி சாட்சியான மகிமை தாஸ், வனத்துறையினர் மிகவும் அருகில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறினார்.
அத்துடன் தம்மை வனத்துறையினர் மிரட்டுவதாகவும் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்து காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வுப் பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த மூவரும் 10 அடிக்குக் குறைவான தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஜான் ரோஸ் பீட்டரின் இடது காதுப்பகுதியில் இருந்து மார்பு வரை ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவரின் வலது மார்பு, தொடை ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் மூலம் அவர்கள் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இக்கொலை வழக்கைச் சிஐடி விசாரணைக்கு மாற்றி அம்மாநிலக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான அறிக்கைகளைச் சிஐடி காவல்துறையினருக்கு அனுப்பி வைப்பதற்கு சாம்ராஜ் நகர் காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் ஏழு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.