கர்நாடகாவின் இரண்டாவது ஆட்சி மொழி: துளு மொழி அங்கீகாரம்
பெங்களூரு: துளு மொழியை கர்நாடகாவின் இரண்டாவது கூடுதல் ஆட்சி மொழியாக அங்கீகரிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு, ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் துளு மொழி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த துளுவுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மங்களூரில் நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் துளு மொழிக்கு மாநிலத்தின் இரண்டாவது கூடுதல் நிர்வாக மொழி அந்தஸ்து வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களும் இதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இதற்கான முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து, துளு மொழிச் சங்கத்தினரும் அப்பகுதி மக்களும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
அதேவேளையில், அரசின் இந்த நடவடிக்கை கன்னட அமைப்புகளிடையே சில எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.