📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health May 27, 2026 04:31 PM

 குடிநீர், சுகாதாரத்தில் பல ஆண்டாகியும் தீர்வு இல்லை: தத்தளிப்பில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சி மக்கள்

 குடிநீர், சுகாதாரத்தில் பல ஆண்டாகியும் தீர்வு இல்லை: தத்தளிப்பில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சி மக்கள்

சின்னாளபட்டி: ஆலமரத்துப்பட்டி ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் குடிநீர், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் பல ஆண்டுகளாக தீர்வு காணப்படவில்லை. இப்பகுதியில் வசிப்போர், அடிப்படை வசதிகளுக்காக அவதிக்குள்ளாகும் அவலம் நீடித்து வருகிறது.

ரத்தினகிரி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்து நகர், கோவிந்தாபுரம், ரங்கநாதபுரம், வரதராஜ் நகர், புதுப்பட்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த ஊராட்சியில் சமீப காலமாக வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் பெரும்பாலான கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் நடக்கிறது.

பிற உபயோக தண்ணீர், தெருவிளக்கு, கழிவுநீர், கால்வாய் சுகாதாரம் சார்ந்த பிரச்னைகள் தாராளமாக உள்ளன.

அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை மனு அளிப்பது வாடிக்கையாகிவிட்டது. பல ஆண்டுகளான போதும் இவற்றின் மீதான நடவடிக்கையில் தொய்வு நிலவுகிறது. இப்பிரச்னைகளால் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் .

தேங்கும் கழிவுநீர் எம்.பி.பத்மநாபன், வியாபாரி, ஆலமரத்துப்பட்டி: ஆலமரத்துப்பட்டியில் ஊராட்சி அலுவலகம் அருகே கால்நடை மருந்தக கட்டடம் சேதமடைந்து அகற்றப்பட்டு உள்ளது. தற்போது வரை இதற்கென தனி கட்டட வசதி இல்லை. அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 60 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த வளாகத்திற்கான அவசர வழி தெற்கு புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வழிமறித்து ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில் அருகே பழைய கட்டட இடத்தில் அமைக்க அனுமதி பெற்றும் பள்ளி வளாகம் நுழைவாயிலை மறித்து கட்டடம் கட்டுகின்றனர்.

அவசர காலங்களில் பள்ளி மாணவர்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது. பல இடங்களில் சாக்கடை அமைத்த போதும் கழிவுநீர் முறையாக வெளியேற்றும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தவில்லை. மெயின்ரோட்டில் அசுத்த நீர் தேங்குகிறது. துர்நாற்றத்துடன் தொற்று அபாயம், சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

கொசுத்தொல்லையால் அவதி மாரிமுத்து ,கூலித்தொழிலாளி, மாரியம்மன் கோவில் தெரு : திடக்கழிவு மேலாண்மையில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினகிரி, போக்குவரத்து நகர், ரங்கநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் போதிய சுகாதாரமான சூழல் இல்லை. கண்ட இடங்களில் குப்பையை குவித்து எரிக்கின்றனர். பலர் தொற்று நோய்கள் பாதிப்புக்கு உள்ளாகிளாகி வருகின்றனர். திண்டுக்கல் - -மதுரை நான்கு வழிச்சாலை பகுதியில் வெளியூர் கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ரோடு சந்திப்புகளில் அமைக்கப்பட்ட பாலம், போதிய உறுதித் தன்மையின்றி வலுவிழந்து சேதமடையத் துவங்கி உள்ளது. அடுத்தடுத்து மழைப்பொழிவு இருந்த போதும் இப்பகுதியில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. 12 முதல் 15 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. தெருக்கள் தோறும் குழாய்கள் அமைத்துள்ளனர். ஆனால் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. வெளி நபர்களிடம் ஒரு குடம் 15 ரூபாய்க்கு தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. சாக்கடை பல இடங்களில் சரிவர பராமரிப்பின்றி தூர்ந்துள்ளது. கழிவுநீர் தெருக்களில் ஓடுவதால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. விஷ பூச்சிகளின் நடமாட்டத்தால் பலர் பாதிப்படைகின்றனர். காவிரி திட்ட தண்ணீரை இணைத்து கூடுதல் தண்ணீர் வழங்கும் வகையிலான நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

--தொடர் நடவடிக்கை அழகர்சாமி ஊராட்சி செயலர், ஆலமரத்துப்பட்டி : தேவைக்கேற்ப பிரச்னைகளின் தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 ஆழ்துளை கிணறுகளில் தற்போது ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் வரத்து உள்ளது. காமராஜர் நீர்த்தேக்கம், ரெங்கநாதபுரம், மில்மேடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பம்பிங் செய்து சீரான தண்ணீர் வினியோகம் நடக்கிறது. மிக குறைந்த நாட்கள் இடைவெளியில் தண்ணீர் வினியோகம் தொடர்கிறது என்றார்.