மாணவர் உடலுக்கு அஞ்சலி: அமைச்சரிடம் வாக்குவாதம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் தனுஷ்குமார், 17; திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.
பள்ளியில், பிளஸ் 1 மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்ததை, நண்பருடன் சேர்ந்து தனுஷ்குமார் தட்டிக்கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த மாணவர், தன் நண்பர்கள் 20 பேருடன் சேர்ந்து, இம்மாதம் 14ம் தேதி மாலை, பள்ளியின் வெளியே நின்றுக் கொண்டிருந்த தனுஷ்குமாரை சரமாரியாக தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
திருவொற்றியூர் போலீசார் விசாரித்து, கொலையில் தொடர்புடைய தியாகராஜன், 18, மற்றும் 11 சிறுவர்கள் உட்பட 12 பேரை கைது செய்தனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, பிரேத பரிசோதனைக்கு பின், தனுஷ்குமாரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த தனுஷ்குமாரின் வீட்டிற்கு சென்ற விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பெற்றோரிடம் ஆறுதல் கூறினார். 6 லட்சம் ரூபாய்க்கான இழப்பீடு தொகையை வழங்கினார்.
இதற்கிடையில், வெளியே வந்த அமைச்சரை சூழ்ந்துக் கொண்ட அப்பகுதி இளைஞர்கள், 'பள்ளி மாணவன் 30 பேர் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
'இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில், 'சி.சி.டி.வி' கேமராக்கள் பொருத்த வேண்டும்.
'மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்' என கோஷமிட்டனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.