கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி; இதுவரை நோட்டீஸ் வரவில்லை
மதுரை: ''பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை கூட்டுறவுத்துறை இன்னும் வெளியிடவில்லை'' என மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா விவசாயிகளுக்கு வழங்கினார்.
டி.ஆர்.ஓ., அன்பழகன், டி.ஆர். டி.ஏ., திட்ட இயக்குநர் சதீஷ்பாபு, மாநகராட்சி துணை கமிஷனர் ஜெயினுல்லாபுதீன், கூட்டுறவு இணைப்பதிவாளர் ஹேமா சலோனி, வேளாண் துணை இயக்குநர்கள் ராணி, சாந்தி, டி.என்.சி.எஸ்.சி., பொதுமேலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
பகவான்: நீர்வளத்துறை கண்மாய், கால்வாய், கரைகள் ஆக்கிரமிக்கப் படுகின்றன. இடத்தை அளந்து கொடுக்க சர்வேயர் வருவதில்லை. நீர்வளத்துறை சொத்துகளை பராமரிக்க வேண்டும்.
செந்தில்குமார்: பாலாற்றின் குறுக்கே சூரப்பட்டியில் தடுப்பணை கட்டக்கூடாது. யாருக்காக நீர்வளத்துறையில் ரூ.9.6 கோடி செலவு செய்யப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க குடியிருப்புகள் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.
பழனிசாமி: த.வெ.க., ஆட்சியிலாவது அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை திறக்கப்படுமா. விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு பட்டியலை எந்த கூட்டுறவு சங்கத்திலும் ஒட்டவில்லை.
ராமன்: தென்கரை, மண்ணாடிமங்கலம் கண்மாய்களில் ஆக்கிரமிப்பால் நீரைத் தேக்க முடியவில்லை.
போஸ்: அயன்பாப்பாகுடி கண்மாயில் மாநகராட்சி குடியிருப்பு கழிவுநீர் தேங்குவதால், அருகில் உள்ள 60 ஏக்கர் நிலங்களிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பத்தாண்டுகளாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.
செல்லம்: போத்தம்பட்டி, கரட்டாம்பட்டி, உசிலம்பட்டி கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. கோழிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.
மணிகண்டன்: 58 கிராம கால்வாய் இடத்தில் பட்டா நிலம் வருவதால் பிரச்னை உள்ளது. அரை கிலோ மீட்டர் துாரம் சீமைக்கருவேல மரங்கள் இருப்பதால் நடக்க பாதையில்லை.
யாகூப் கான்: தென்கரை கண்மாய் வறண்டுள்ளது. வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.
பொன்னையா: சக்கிமங்கலம், கார்சேரி, சக்குடி, உடன்குடி கண்மாய்களில் மாநகராட்சி கழிவுநீர் சேர்கிறது. சக்கிமங்கலம் சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் பயனில்லை.
அய்யாக்கண்ணு: இருபோக சாகுபடிக்கு தண்ணீர் இன்றி 45 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கலெக்டர் பேசியதாவது:
ஜூலை 27 ல் சூரப்பட்டி தடுப்பணை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்படும். கண்மாய், கரை, கால்வாயில் ஆக்கிரமிப்பு இருந்தால் ஆய்வு செய்து அகற்றப்படும். 58 கிராம கால்வாயில் பட்டா நிலத்துக்குரியவரின் சர்வே எண் தான் மாற்றம் என்பதால் கால்வாய் செல்லும் இடத்தின் நில வகைப்பாட்டை மாற்றலாம். தென்கரை, மண்ணாடிமங்கலம் கண்மாய்களில் வண்டல் அள்ள அனுமதிக்கப்படும் என்றார்.