கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக்கில் 67 பேர் 'சஸ்பெண்ட்'
சென்னை: தமிழகம் முழுதும் மது கடைகளில், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்து, டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக,மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளில் பணிபுரியும் பல பணியாளர்கள், மது பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட, கூடுதலாக 10 ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றனர்.
இந்நிலையில், 'டாஸ்மாக் பணியாளர்களுக்கு, 10,000 ரூபாய் ஊதிய உயர்வு, கடைகளில் துாய்மை பணி மேற்கொள்ள, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும்.
இனி, ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவர்' என, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், சமீபத்தில் அறிவித்தார்.
இருப்பினும், பல கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக, மது பிரியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மாவட்ட மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மது கடைகளில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கூடுதலாக பணம் வசூலித்த, 67 மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை, 100ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.