'கூடுதலாக ₹1 வசூலித்தால் சஸ்பெண்ட்': டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுடன் அமைச்சர் விக்னேஷ் விடுத்த எச்சரிக்கை
'கூடுதலாக ₹1 வசூலித்தால் சஸ்பெண்ட்': டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுடன் அமைச்சர் விக்னேஷ் விடுத்த எச்சரிக்கை
தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பளம் உயர்த்தப்படுவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் சட்டசபையில் அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், தொழற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட 4 கட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு ₹33,026 சம்பளமாகவும், விற்பனையாளர்களுக்கு ₹30,284 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ₹28,650 ஆகவும் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ₹486.90 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும்.
முக்கிய அறிவிப்புகள்
ஊழியர்களுக்கு பண்டிகை போனஸாக ₹20,000 வழங்கப்படும். மேலும், ஆண்டுதோறும் 3 சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவுக்காக ₹6,000 வழங்கப்படும்.
மாநகராட்சி கடைகளுக்கு மாதம் ₹5,000, நகராட்சி/பேரூராட்சி கடைகளுக்கு ₹4,000, மற்றும் கிராமப்புறக் கடைகளுக்கு மாதம் ₹3,000 பராமரிப்புத் தொகையாக வழங்கப்படும்.
8 மணி நேர சுழற்சி முறைப் பணி, வாரத்திற்கு 1 நாள் விடுமுறை மற்றும் மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய கேஷுவல் லீவ் வழங்கப்படும்.
தகுதியுள்ள 250 டாஸ்மாக் பணியாளர்கள் சிறப்புத் தேர்வு மூலம் 'இளநிலை உதவியாளராக' நியமிக்கப்படுவர்.
சம்பள உயர்வை அறிவித்த கையோடு, மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்று முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அமைச்சர் விக்னேஷ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"முந்தைய ஆட்சிகளில் கூடுதல் விலைக்கு விற்றால் வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் நமது அரசில் கூடுதலாக ஒரு ரூபாய் வசூல் செய்தால் கூட உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள். அதே தவறை இரண்டாவது முறை செய்தால் நிரந்தரமாகப் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்" என சட்டமன்றத்திலேயே முதல்வர் முன்னிலையில் எச்சரித்தார்.