📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 31, 2026 04:04 PM

நான்கு மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

நான்கு மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

நான்கு மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

Published : August 31, 2026 at 3:01 PM IST

ராணிப்பேட்டை: நான்கு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் 50-க்கும் மேற்பட்டவர்கள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ரெண்டாடி அடுத்த அருந்ததியர் பாளையம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர், கடந்த நான்கு மாதங்களாக முறையாக வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் எழுப்பியுள்ளனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டும் பிரச்சினை தீர்க்கப்படாததால், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், குடிநீர் என்பது மக்களின் அடிப்படைத் தேவையாகும். எனவே, காலதாமதமின்றி தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை ஆய்வு செய்து, நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர். குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் திடீரென காலி குடங்களுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக காவல்துறையினர் இணைந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.