குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு
குவைத் சிட்டி: அமெரிக்கா - ஈரான் இடையேயான சண்டை நிறுத்தத்துக்குப்பின் நேற்று இரு நாடுகள் இடையே மிகப் பெரியளவில் மோதல் வெடித்தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்கப்பட்டதால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் ராணுவத் தளங்கள் பல சேதம் அடைந்தன. இந்நிலையில் இரு நாடுகள் இடையே கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் முன்வராததால், போர் நிறுத்தம் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் 2 தீவுகளில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார் மற்றும் தொலை தொடர்பு கோபுரத்தை அமெரிக்கப்படை சில நாட்களுக்கு முன் தகர்த்தது. இதனால் இரு நாடுகள் இடையே மீண்டும் போர் ஏற்படும் சூழல் நிலவியது.
இச்சூழலில் ஈரானின் எண்ணெய் கப்பல் ஒன்று ஈரான் நோக்கி சென்றது. அந்த கப்பல் மீது அமெரிக்கப்படை ஏவுகணை தாக்குதல் நடத்தி முடக்கியது. அமெரிக்க படைகள் குவைத் மற்றும் பஹ்ரைனில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவதால் அந்நாடுகள் மீது ஈரான் நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவி பதிலடி கொடுத்தது. குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். 63 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து குவைத் தனது வான் வெளியை மூடியது. குவைத் நோக்கி வந்த விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான உதவி அளிக்கப்படும் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தால் இண்டிகோ நிறுவனம் குவைத் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பயணிகள் தங்கள் முழு கட்டணத் தொகையை திரும்ப பெறலாம். அல்லது குவைத்துக்கு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியவுடன் பயணம் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
பஹ்ரைன் மீது தாக்குதல்
பஹ்ரைன் மீது ஈரான் 3 ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இவை அனைத்தும் நடுவானில் அழிக்கப்பட்டன. அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் இருந்து செயல்பட குவைத் மற்றும் பஹ்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளதால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.