📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 19, 2026 05:30 PM

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு... காலக்கணிதன் கண்ணதாசன்!

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு... காலக்கணிதன் கண்ணதாசன்!

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு... காலக்கணிதன் கண்ணதாசன்!

கவிஞர் கு.உமாதேவி, தனது சிறுவயது முதல் கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தன் வாழ்விலும் கவிதைப் பயணத்திலும் ஏற்படுத்திய தாக்கத்தை நினைவுகூர்கிறார்.

கு.உமாதேவி முனைவர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர்.

செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் படிக்கும் மாணவிக்குக் கிடைத்த முதல் பரிசு அது. அது வெறும் பரிசல்ல; அவளின் கவித்திறனுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் !

தன் வாழ்நாளில் பொதுவெளியில் முதன்முதலாகத் தான் பெற்ற அந்த மகிழ்வைத் தன் குடும்பத்தோடு பகிர்ந்துகொள்ள வேகமாகப் பேருந்து நிலையத்திற்குள் ஓடிவந்து, தன் கிராமத்திற்குச் செல்லும் பேருந்தின் கடைசி ஜன்னலோர இருக்கையில் மூச்சிரைக்க அமர்ந்து, நிதானமாகத் தன் கையில் இருக்கும் அந்தப் பரிசுப் புத்தகத்தைத் திறந்து பார்க்கிறாள். அந்தப் பெண் வேறு யாருமல்ல... 'உமாதேவி' எனும் நான்தான். என் கையில் இருந்த புத்தகம் 'கவிஞர் கண்ணதாசன் திரைப்படப் பாடல்களில் இலக்கியம்' என்ற நூல்.

என் நிலப்பரப்புக்கோ என் வாழ்விடத்திற்கோ என் காலத்திற்கோ எந்த விதத்திலும் தொடர்பில்லாதவர். தமிழ் எங்கள் இருவருக்கும் தாய்மொழி என்பதைத் தவிர, எங்களை இணைப்பதற்கு வேறெதுவும் இல்லையென்று மட்டுமே எனக்கு அப்போது தோன்றியது. ஆனால், அதுவொரு தோற்றப்பிழையென்று இப்போது புரிகிறது. சிறுவயது முதல் இப்போது வரை நான் கற்கும் வாழ்க்கைப் பாடங்கள் எல்லாவற்றிலும் அவரின் பாடல் வரிகளே எனக்கு வழித்துணையாக இருந்திருப்பதால், அவரை என் பெருமைமிகு வரித்துணை என்றே சொல்வேன்.

ஏட்டுத்தமிழில் எளிமையைக் குழைத்து, அதைப் பாமரர் தெருவில் பந்தியிட்ட பாட்டுக்கவி. வாழ்வின் மெய்ப் பொருளுக்குத் தமிழூட்டி அமைதிப்படுத்தும் ஆற்றுக்கவி சந்த இசை நயத்துக்குச் சாலப் பொருந்தும் பெருங்கவி. புனைவுச் சிற்பி. இல்லறத்துறவி. தெளிஞன், அறிஞன்; உள்ளுந்தோறும் ஆச்சர்யம் கொள்ளத் தோன்றும் சிறுகூடல்பட்டி அய்யன்.

அய்யனுக்கு இந்த ஆண்டு நூறு. நான் எதைப் பகிர்வது? திரையிசைப் பாடலாசிரியராக அவர் கோலோச்சிய அதே துறையில் நானும் இருக்கிறேன் என்ற கர்வத்தையா? சிறு பிராயம் முதல் அவரின் பாடல்களைக் கேட்டு வளர்ந்த பெருமிதத்தையா? இரண்டாவதையே நான் பகிர விரும்புகிறேன். என் ஏழு வயதில் எங்கள் ஊர்த் திருவிழாவில் நடந்த கூத்தின் வழியாக என் செவிகளுக்குள் வந்து சேர்ந்தார் கவியரசர். எங்கள் மாயகிஷ்டன் தாத்தா நடத்திவந்த கூத்து ஜமாவின் 'காளிங்கன் கடற்கொள்ளை அல்லது ரத்தினமாளிகை' என்ற நாடக ஒத்திகை பார்க்க, அம்மாவுடன் நானும் போயிருந்தேன். காரணம், அதில் கதாநாயகி வேடம் கட்டுவது எங்க பெரிய அண்ணன் மேகநாதன்.

பனியன் போட்டிருந்த மார்பின் குறுக்கே ஒரு துண்டை பெண்ணின் புடவை முந்தானைபோல் செருகிக்கொண்டு, 'நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்.. என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்' என்ற பாடலைப் பாடிக்கொண்டே ஆடியதும், 'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக...' என்று தனசேகர் மாமா பாடியாடியதும் எனக்கு வியப்பாகவும் விளையாட்டாகவும் இருந்தது. ஆனால், மறுநாள் பள்ளிக்கூடத்தில் என் தோழிகளிடம் இரவு ஒத்திகையில் கேட்ட அந்தப் பாடல்களை மனப்பாடமாகப் பாடிக்காட்டினேன். அப்போது இதை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எப்படி அது என்னை அறியாமல் என் மூளைக்குள் காத்திரமாகப் பதிந்தது என்றும் எனக்குத் தெரியவில்லை.

ஒருநாள், என் தங்கை சித்ராவை ஓடஓட அடித்து விரட்டிக்கொண்டிருந்தாள் அமுலக்கா. என்னவென்று விசாரிக்க, "இங்கு வைத்திருந்த கண்ணதாசன் பாட்டுப் புத்தகங்களை எடுத்து எடைக்குப் போட்டு இவதான் ஐஸ் வாங்கித் தின்னிருப்பா" என்று சொல்ல, நானும் உச்சக்கட்ட கோபத்தில் என் தங்கையை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்தேன். காரணம், அவள் வாங்கித் தின்ற ஐஸுக்காக அல்ல; என்னுள் ஆழ இறங்கியிருந்த கண்ணதாசனின் பாடல்களுக்காக!

அண்ணன் அக்காக்கள் பள்ளிக்குப் போய், தாய் தகப்பன் கூலிக்குப் போய், ஊரே வெறிச்சோடிக் கிடக்கையில், என் சகாக்களோடு சேர்ந்து காட்டுக்காரியாய் ஏரி, கிணறு, குளம், காடு, மேடு, கழனி, வேலி எனச் சுற்றித் திரிந்து, சுண்டெலித் தாத்தாவின் கிணத்துமேட்டுப் புளியமரத்தின் உச்சியில் ஏறி உலுக்கிக்கொண்டே, 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்... இதோ இந்த அலைகள்போல ஆட வேண்டும்' என்ற பாடலைப் பாடிப் பாடி நான் பரவசமடைந்த பதின்பருவ நாட்களில், பாடல்களுக்குள் பொதிந்துகிடந்த மொழியையும் கவிதையையும் ரசிக்கக் கற்றுக்கொண்டிருந்தேன்.

எங்கள் ஊர், நிலமெங்கும் எங்களோடு சேர்ந்து கவியரசர் ஏறு ஓட்டுவார்; வரப்புகளில் அண்டை வெட்டுவார்; நடவு நடுவார்; களை எடுப்பார்; ஆனைத் தொட்டிலில் அழும் எங்கள் குழந்தைகளுக்கு ஆராரோ பாடித் தூங்க வைப்பார். வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த 'காதோடுதான் நான் பாடுவேன்' பாடலில் வரும் 'உன் மடிமீதுதான் கண் மூடுவேன்' வரிகளைப் பாடிக் கொண்டே வந்து பிரிமணை திரிக்கும் அப்பாவின் தலைமுடியைக் கோதிச்சென்ற அம்மாவின் ஆழக் காதல் கவியரசரின் கவிதைபோல் பலித்தே போனது.

பத்துப் பேரில் ஒன்பதாவதாய், நான்கு அண்ணன்களுக்குத் தங்கையாய்ப் பிறந்த என் போன்றோருக்குக் கவியரசரின் 'அண்ணன் ஒரு கோயில் என்றால், தங்கை ஒரு தீபமன்றோ... தொட்டிலிட்ட தாயுமில்லை, தோளிலிட்ட தந்தையில்லை, கண் திறந்த நேரம் முதல் கைகொடுத்த தெய்வமன்றோ, அதன் பேர் பாசமன்றோ...' என்ற வரிகள் அண்ணன்களின் அரவணைப்பையும் பாசத்தையும் ஒருசேரச் சூடிக்களிக்கும் பெரும் பேறு!

அனுபவத்தின் சாற்றைத் தமிழில் பிசைந்து அள்ளித் தந்தவர். அவரின் எந்தப் பாடலையும் கேட்டு விட்டு இயல்பாய்க் கடந்துவிட முடியாது. 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ...' என, என் அம்மா அப்பா இழப்பில் என்னைச் சூழ்ந்திருந்த சூன்யத்தை அகாலமாய் நான் கடக்கும் நொடியை எப்படி அப்படியே எழுதிவைத்தார் கவியரசர்!

'எட்டடுக்கு மாளிகை' பாடல் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத என் வாழ்வின் ரகசியப் பக்கங்களின் வலிகளை அம்மாவுக்குக் கடத்தியிருக்கிறது. இப்போது நினைத்துப் பார்க்கையில், மனித வாழ்வில் நடக்கும் தருணங்களைத் தன் படைப்பில் எப்படி ஒரு கவிஞன் படம்பிடித்தான் என்று வியப்படைகிறேன். அதனால்தான் எம்.ஜி.ஆர். பாட்டு, சிவாஜி பாட்டு என்றிருந்த தமிழ் சினிமா காலகட்டத்தில், 'கண்ணதாசன் பாட்டு' என்று கூற வைத்துக் காலத்தையே தன்வயப்படுத்திய காலக்கணிதன் கவியரசர்.

போனால் போகட்டும் போடா', 'சட்டி சுட்டதடா', 'வீடு வரை உறவு போன்ற வரிகளைப் பாடலின் தொடக்கமாக்கிய கவியரசரின் மரபு நீட்சியே 'போறேன் நான் போறேன்' என்று ஒரு பாடலைத் தொடங்கலாம் என்ற எண்ணத்தை எனக்குள் எழுப்பியிருக்கலாம்.

கைக்கொள்ள முடியாத சூழல்களால் சோர்ந்து, தளர்ந்து, தள்ளாடி நிற்கையில், 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்ற காலத்திற்குமான கவியரசரின் வரிகளையே இந்தப் பிரபஞ்சம் எனக்குத் தந்துகொண்டிருக்கிறது. ஆன்மிகமோ அனான்மிகமோ தராத சித்தாந்தத் தெளிவை கவியரசரின் இந்த வரிகளே என் முன்நகர்தலை உறுதி செய்கின்றன.