📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 04, 2026 05:01 AM

கவிஞர் தமிழ்ஒளி நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

கவிஞர் தமிழ்ஒளி நினைவைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கவிஞர் தமிழ்ஒளி, கடலூர்(தென்னாற்காடு மாவட்டம்), குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் என்னும் சிற்றூரில் சின்னையா, செங்கேணி அம்மாள் இணையருக்குப் 21.09.1924-ல் பிறந்தார். தமிழ் ஒளி அவர்களின் இயற்பெயர் விசயரங்கம். தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவராயிருந்தபோதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளால் ஈர்க்கப்பெற்றார்.

கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் ஆகியவற்றை இயற்றியவர். அவரின் கவிதைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

அவர் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர்மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே நாளை வரவேற்றுப் பாடியவர். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர் ஒடுக்கப்பெற்றவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடியவர்.

கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு அவரின் பெயரில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்சார்ந்த போட்டிகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுவான தலைப்புகளில் பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியும் நடத்தப்பெற்று வருகிறது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,000/- மூன்றாம் பரிசு ரூ.5,000/-மற்றும் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டிற்கு, 'கவிஞர் தமிழ்ஒளி' நினைவைப் போற்றும் வகையில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் தியாகராய நகர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 09.09.2026ஆம் நாளன்று நடைபெற உள்ளன.

மாணவியர் கவிஞர் தமிழ்ஒளி கவிதை ஒப்பித்தல் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, https://tamiloli.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கவிதைகளைப் பதிவிறக்கம் செய்து, கவிதைகளை ஒப்பித்தல் வேண்டும். பேச்சுப்போட்டியில் பங்கேற்போர் பாரதியின் கனவும் இன்றைய இளைஞர்களும், நீர் மேலாண்மையின் அவசியத் தேவை, நட்பின் இலக்கணம், பிளாஸ்டிக் இல்லாத உலகம் என்ற தலைப்புகளில் பேச வேண்டும். கவிதைப் போட்டியில் பங்கேற்போர், கல்வி தரும் ஒளி என்ற தலைப்பில் கவிதை எழுதுதல் வேண்டும்.

இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/ மாணவியர் https://tamiloli.in என்ற இணையத்தில் உள்ள பங்கேற்புப் படிவத்தை பதிவிறக்கம் செய்து இணைப்பிலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நிறைவு செய்து பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரையுடன் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், எழும்பூர் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் அல்லது tvt.officiallanguage@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வரும் 08.09.2026 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.