பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை விஜய் ஆதரிப்பார்
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை விஜய் ஆதரிப்பார் - அமைச்சர் விஸ்வநாதன் நம்பிக்கை
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தலைவர் சிறந்த தலைவர் என்று முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் விஸ்வநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Published : September 10, 2026 at 3:14 PM IST
சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நிச்சயம் ஆதரிப்பார் என்று அமைச்சர் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தனியார் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இது முற்றிலும் மதச்சார்பற்ற கூட்டணி. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின் பாஜகவுடன் இணைய சில அரசியல் கட்சிகள் முயன்றன. அதனால் தான் காங்கிரஸ் உடனடியாக வெளியேறியது" என்று திமுகவை மறைமுகமாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தற்போது காங்கிரஸ் கட்சி பாதுகாப்பான நல்ல கூட்டணியில் இருக்கிறது. ஏனென்றால் இந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் கேப்டன் ஒரு நல்ல கேப்டன் மற்றும் சிறந்த தலைவர் ஆவார். விஜய் தலைமையில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து செயல்படுவோம். நாங்கள் இப்போது வலுவாக உள்ளோம்." என்றார்.
பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், "சரத்பவார் ஒரு தேசிய அரசியல் கட்சித் தலைவர். சரத்பவாரை அவரது ரசிகர்கள் மற்றும் அவர்களின் கட்சித் தொண்டர்கள் பிரதமர் என்று கூறுகின்றனர். ஏனென்றால் அது அவர்களது கட்சி மற்றும் அவர்களது நோக்கம். இந்திய பெண் அரசியல்வாதியாக மம்தா பானர்ஜி உள்ளார். அவரது கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் அவரை பிரதமராக்க விரும்புகின்றனர். இது அவர்களின் விருப்பம்.
இந்திய அரசியலில் முக்கிய தலைவராக இருப்பவர் சந்திரபாபு நாயுடு. அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், சந்திரபாபு நாயுடு நாட்டின் பிரதமரமாக வர வேண்டும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.
பாஜகவுடன் ராகுல் காந்தி நீண்டகாலமாக சண்டையிட்டு வருகிறார். எனவே நமது முதலமைச்சர் விஜய், 2029- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிச்சயம் ஆதரிப்பார்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2029-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்? யாருக்கு ஆதரவு? என்பது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையோ, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை; அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.