📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 11, 2026 12:30 PM

தமிழ் ஓவியர்களே அங்கீகரிக்காதது வருத்தமளித்தது!

தமிழ் ஓவியர்களே அங்கீகரிக்காதது வருத்தமளித்தது!

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், ஆவணப்பட இயக்குநர், கலை விமர்சகர் என்று பன்முக ஆளுமையாகத் திகழ்பவர் இந்திரன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒருசேர எழுதுகிற வல்லமை பெற்றவர்.

தமிழ்ப் பரப்பில் எழுத்து, ஓவியம் உள்படப் பல்வேறு தளங்களில் செயல்படுகிறவர்களைச் சர்வதேச அளவில் அறியவைக்க முயல்வது இவரது நீண்ட காலப் பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. அவருடனான உரையாடலில் இருந்து...

இந்திரன் என்கிற பெயரை எப்போது சூடிக்கொண்டீர்கள்?

எனது இயற்பெயர் ராஜேந்திரன். சிறு வயதில் கவிதை, பாடல் என எழுதும்போது ‘ஞானம்பாடி’ என்கிற பெயரையே பயன்படுத்தினேன். வங்கியில் கணக்காளராக (கேஷியர்) வேலை கிடைத்து, பம்பாய்க்கு மாற்றலாகிச் சென்றபிறகும் அந்தப் பெயரிலேயே தொடர்ந்து எழுதினேன்.

ஒருகட்டத்தில் அந்தப் பெயர் கொஞ்சம் அதீதமாக இருப்பதாகத் தோன்றியது. அது மட்டுமல்லாமல், ஓர் ஆங்கில நாளிதழில் எழுதியபோது அங்கு இருந்தவர்கள் அந்தப் பெயரை ‘கணபதி’ என்று படித்தார்கள். அதன்பிறகே, ராஜேந்திரனைச் சுருக்கி ‘இந்திரன்’ என்கிற பெயரில் எழுதத் தொடங்கினேன்.

எப்போது மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினீர்கள்?

அடிப்படையில் நான் ஒரு வாசகன். ஆங்கிலத்தில் இருக்கிற உரைநடையை நான் புரிந்துகொள்ளத்தான் மொழிபெயர்ப்பில் இறங்கினேன். எனக்குப் புரிவதற்காகத் தமிழில் மொழிபெயர்த்ததை, பின்னர் புத்தகமாக வெளியிட்டேன்.

கவிஞர் ம.இலெ.தங்கப்பா தான் என்னை ஆங்கிலத்தில் எழுதத் தயார் செய்தவர். தனித்தமிழ் ஆர்வலர் என்றாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்காக சாகித்ய அகாடமி உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது, அவருடன் இணைந்து பாரதிதாசன் கவிதைகளை மொழிபெயர்த்து ‘Gems from Bharathidasan’ என்கிற பெயரில் வெளியிட்டேன்.