📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 01, 2026 08:32 AM

"கவனமா இருங்க மக்களே!" ஆகஸ்ட் 1 முதல் உங்கள் பணப்பையை பாதிக்கும் புதிய மாற்றங்கள்!

"கவனமா இருங்க மக்களே!" ஆகஸ்ட் 1 முதல் உங்கள் பணப்பையை பாதிக்கும் புதிய மாற்றங்கள்!

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளையும் போலவே, ஆகஸ்ட் 1 முதல், வங்கிச் சேவைகள், முதலீடுகள், வரிகள், ரெயில் டிக்கெட் முன்பதிவு, எல்பிஜி சிலிண்டர் விலைகள் மற்றும் சில அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய மாற்றங்கள் சில சமயங்களில் உங்கள் மாதாந்திர வரவு செலவுத் திட்டத்தையும், சில சமயங்களில் உங்கள் நிதிப் பரிவர்த்தனைகளையும், சில சமயங்களில் உங்கள் சேமிப்புத் திட்டங்களையும் பாதிக்கக்கூடும். புதிய மாதத்தின் தொடக்கம் சிரமமின்றி இருக்க வேண்டுமென்றால், இந்த மாற்றங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றபடி திட்டமிடுவது மிகவும் அவசியம்.

ஆகஸ்ட் 1 முதல் வரவிருக்கும் முக்கிய நிதி மாற்றங்கள் குறித்தும், அவை உங்கள் பாக்கெட்டை எப்படியெல்லாம் பதம் பார்க்கும் என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம் வாங்க..

வங்கி விடுமுறைகள்!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடும். அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான விடுமுறைப் பட்டியலில் மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

இந்த 14 நாட்களும் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படாது. இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை விடுமுறைகளோடு ஞாயிறு விடுமுறை மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானதாக இருக்கும். அதேபோல, ஆகஸ்ட் 15-ம்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களுக்கும் பொது விடுமுறை. மற்ற விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம். வங்கி விடுமுறை நாட்களிலும், நிகர வங்கிச் சேவை (net banking), UPI மற்றும் ஏடிஎம் (ATM) போன்ற சேவைகள் தடையின்றிச் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ATF எரிபொருள் விலைகள்

மாத தொடக்கத்தில் எல்பிஜி (LPG) விலையைப் போலவே, விமான நிறுவனங்களுக்கான ஜெட் எரிபொருள் அல்லது ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ATF) விலையும் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகிறது. ATF விலை உயர்ந்தால், வரும் நாட்களில் விமான நிறுவனங்கள் விமானக் கட்டணங்களை உயர்த்தக்கூடும்.

ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழுவின் முக்கிய ஆய்வுக் கூட்டம் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது.

அஞ்சல் துறை புதிய விதிகள் மற்றும் கட்டணங்கள்:

இந்திய அஞ்சல் துறை (India Post) தனது வாடிக்கையாளர்கள் கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1 முதல், எது 'ஆவணம்' மற்றும் எது 'பார்சல்' என்பதற்கான தெளிவான வரையறைகளை அஞ்சல் துறை அமல்படுத்துகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தேவையற்ற கூடுதல் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படும்.

24 மணி நேர விரைவு தபால் சேவையில் பொதுமக்களுக்கான கட்டணம் பொருளின் எடைக் மற்றும் தூரத்திற்கேற்ப குறைந்தபட்சம் ரூ.28 முதல் அதிகபட்சம் ரூ.186 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

50 கிராமுக்கும் குறைவான பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38ம், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94ம் (+ ஜி.எஸ்.டி) வசூலிக்கப்படும். 48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் பொதுமக்களுக்கு ரூ.61 முதல் ரூ.121 வரை இருக்கும்.

ஒப்பந்த அடிப்படையில் அதிக அளவில் ஆவணங்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு 24 மணி நேர சேவைக்கு ரூ. 38 முதல் ரூ. 100 வரையிலும், 48 மணி நேர சேவைக்கு ரூ. 48 முதல் ரூ. 72 வரையிலும் தனிச் சலுகைக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

PFல் இருந்து UPI மூலம் பணம் எடுக்கும் வசதி

வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை யுபிஐ (UPI) மூலம் நேரடியாகப் பெறும் புதிய வசதி, வரும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி 'பீம்' செயலி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை வங்கி கணக்குடன் இணைத்து, அவசர தேவை மற்றும் தகுதியான கோரிக்கைகளுக்கான பணத்தை உடனடியாக பெறமுடியும். டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தி, சந்தாதாரர்களின் கோரிக்கைகளை விரைவாக தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. போர்ட்டல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் இந்த பிரச்சினைகள் சீர் செய்யப்படும் எனவும் அதன்பிறகு யுபிஐ-யுடன் இணைந்த பரிவர்த்தனை வசதி முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கார்டு e-KYC சரிபார்ப்பு

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் நோக்கிலும், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் (இலவச அரிசி, மானிய விலையில் எண்ணெய், சர்க்கரை போன்றவை) தடங்கலின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு e-KYC பதிவைக் கட்டாயமாக்கியுள்ளது.

கைவிரல் ரேகை பதிவாகாத குழந்தைகள் மற்றும் முதியவர்கள், முதலில் அரசு சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் கண் பதிவை செய்துகொண்ட பின்னரே e-KYC செய்ய முடியும்.

இறந்தவர்களின் பெயர்களை நீக்க, அருகிலுள்ள ரேஷன் கடை விற்பனையாளரிடம் குடும்ப அட்டை மற்றும் ஆவணங்களின் நகல்களை வழங்கலாம்.

AAY மற்றும் PHH பிரிவுகளை சேர்ந்த ரேஷன் அட்டை பயனாளிகள், எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தோடர்ந்து பலன்களை பெற ஜூலை 31-ம்தேதிக்குள் (இன்றுடன்) இந்த பணியை செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரெயில்வே லக்கேஜ் விதிகளில் மாற்றம்

தட்கல் டிக்கெட் முன்பதிவு, டோக்கன் முறை மூலமாக சுலபமானதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் லக்கேஜ் முன்பதிவு சேவையும் இன்று (ஜூலை 31) முதல் தொடங்கவுள்ளது.

புதிய சேவையின் கீழ், யணிகள் தங்களது வகுப்பிற்கேற்ப குறிப்பிட்ட எடை மற்றும் அளவிலான பொருட்களைக் கட்டணமின்றி கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கூடுதல் எடையுள்ள பொருட்களைக் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு (confirmed ticket) வைத்திருக்கும் பயணிகள், ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போதே, தங்கள் கூடுதல் லக்கேஜையும் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்ய முடியும். இந்திய ரெயில்வேயின் இந்த புதிய விதிகளின்படி, பயணிகள் இனி ரெயில் நிலையத்தின் பார்சல் அலுவலகத்திற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை.

இன்று (ஜூலை 31) முதல் அமலுக்கு வரும் இந்த வசதியின் மூலம், பயணிகள் இலவசமாக தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜை IRCTC அல்லது அதிகாரப்பூர்வ ரெயில்வே இணையதளம் வழியாக முன்கூட்டியே அறிவித்து முன்பதிவு செய்யலாம்.

- இது தவிர இன்னும் சில மாற்றங்களும் ஆகஸ்ட் மாதத்தில் வரவிருக்கிறது. அவை..

ஆகஸ்ட் 1 அன்று எல்பிஜி சிலிண்டர்களுக்கான புதிய விலைகள் வெளியிடப்படும். சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, வணிக (19 கிலோ) மற்றும் வீட்டு உபயோக (14.2 கிலோ) சிலிண்டர்களின் விலைகள் உயரவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 1 முதல், பல முக்கிய வங்கிகள் மற்றும் கார்டு வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கிரெடிட் கார்டு விதிகளை மாற்றியமைக்கின்றன. இதில் ரிவார்டு புள்ளிகளைப் பெறுதல், பில் செலுத்துவதற்கான விதிமுறைகள், தாமதமாகப் பணம் செலுத்துவதற்கான அபராத கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

ரெயில் பயணிகளுக்காக தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் முக்கிய மாற்றம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரெயில்வே முன்பதிவு கவுண்டர்களில் டோக்கன் வழங்கும் நேரமும், முன்பதிவு தொடங்கும் நேரமும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 1 முதல் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026-27 நிதியாண்டிற்கான ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 31 கடைசித் தேதியாகும். அதற்குள் தாக்கல் செய்யாதவர்கள் தாமதக் கட்டணங்களை எதிர்கொள்ள நேரிடும். தணிக்கை (Audit) தேவைப்படாத வணிகங்களுக்கான இத்தப் படிவங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் உள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள்ளும் தாக்கல் செய்யத் தவறினால், வருமான வரி விதிகளின்படி நீங்கள் ரூ. 5,000 வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். அதேபோல, தணிக்கை தேவைப்படும் வணிகங்களுக்கான காலக்கெடு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் CKYC 2.0 என்ற புதிய ஆதார் அடிப்படையிலான KYC முறை அறிமுகமாகிறது. இனி வாடிக்கையாளர்களின் KYC தகவல்களை பகிர்வதற்கு தனிப்பட்ட ஒப்புதல் பெறப்படும். இதன் மூலம் KYC செயல்முறை மேலும் பாதுகாப்பாகவும், விரைவாகவும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.