📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 17, 2026 09:34 AM

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம்

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம்

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் பார்த்தால் 192 ரூபாய் மதிப்புள்ள, சுமார் 215.4 கிராம் எடைகொண்ட குட்காவுக்காக சபரிவர்மன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 12-ம் தேதி இரவு அவர் தாக்கப்பட்டுள்ளார், 13-ம் தேதி அதிகாலையில் உயிரற்ற உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. சபரிவர்மனை தாக்கியதாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 சிறைக் கைதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பதிலளிக்கும்வரை சபரிவர்மனின் உடலை வாங்கமாட்டோம் என அவரது குடும்பத்தினர் 4 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம் 9-ம் தேதி அவர்மீது பதியப்பட்ட வழக்கு குறித்த விபரங்கள் முதல் தகவல் அறிக்கை (FIR) மூலம் தெரியவந்துள்ளது. 09-07-2026 அன்று ​தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங், தலைமை காவலர்கள் ஞானபிலிப்பு, சுயம்புலிங்கம் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்களாம். அப்போது ஈத்தன்காடு கீழத்தெருவில் உள்ள சபரிவர்மனின் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் போலீஸார் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம், கடையின் உரிமையாளரான சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஆஜர்படுத்தினாராம்.

எவ்வளவு குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற விபரமும் எஃப்.ஐ.ஆரில் உள்ளது. தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை – 11 பாக்கெட்டுகளும், தலா 12.6 கிராம் எடைக்கொண்ட C****p – 4 பாக்கெட்டுகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு 192 ரூபாய் என அந்த எஃப்.ஐ.ஆரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு வேறு யாரும் சாட்சியாக முன்வராததால் உடன்சென்ற போலீஸாரையே சாட்சியாக மாற்றி சபரிவர்மனை கைதுசெய்துள்ளார் எஸ்.ஐ பிரைட் பிளஸிங். அதன்பிறகு அன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நடந்த தாக்குதலில் சபரிவர்மன் இறந்துள்ளார்.