மாநாட்டை முடித்த கையோடு விஜய் சந்திப்பு.....ரகசியம் உடைத்த திருமா!
மாநாட்டை முடித்த கையோடு விஜயுடன் சந்திப்பு ஏன்?.....ரகசியம் உடைத்த திருமா!
தவெகவின் ஆட்சி 5 ஆண்டுகளுக்கும் தொடரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் விஜயை சந்தித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சந்திப்பில் நடைபெற்றது குறித்து விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், தவெகவுடன் இணைந்து 100 நாட்களைக் கடந்த நிலையில், தொடர்ந்து தவெகவுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார். மேலும், நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கியதாகவும் கூறினார்.
குறிப்பாக, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்ததாகவும், மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து, அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும், மேகமலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏராளமான குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், போதைப்பொருளை ஒழிக்க அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும், இதற்காக போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“விசிகவின் வீரியம் எங்கேயும் நீர்த்துப் போகவில்லை. எந்த இடத்தில் எப்படி குரலை உயர்த்த வேண்டுமோ, அப்படி குரலை உயர்த்திக்கொண்டுதான் இருக்கிறோம். தவெகவுடன் கைகோர்த்து இருக்கிறோம். மேகமலை விவகாரத்தில் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
மேலும், “சமூகச் சிக்கல்கள், வன்முறைகள், படுகொலைகள் ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது ஆட்சி மட்டுமே பொறுப்பேற்க முடியாது. நாம் ஒவ்வொருவருக்கும் அதில் பொறுப்பு உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்களுக்கும் பொறுப்பு உள்ளது” என்றும் தெரிவித்தார்.
“நாங்களும் ஆளும் கட்சிதான். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம். எங்களையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டுள்ளனர். கூட்டணி அமைப்பது தொடர்பாக முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அடுத்த கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.
தவெகவுடன் இணைந்து பயணிப்போம் என்று நேற்றைய மாநாட்டில் உறுதிப்படுத்தியுள்ளோம். கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளும் கட்சி என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த வளர்ச்சியை மக்கள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பப்படியே எங்கள் அரசியல் இருக்கும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.