மாஞ்சோலை எஸ்டேட் சகாப்தம் முடிவுக்கு வந்தது | தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
மாஞ்சோலை எஸ்டேட் சகாப்தம் முடிவுக்கு வந்தது | தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
சிங்கப்பட்டி ஜமீன், மாஞ்சோலையில் உள்ள சுமார் 8,373.57 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியிருந்தார்.
Published : July 12, 2026 at 3:44 PM IST
திருநெல்வேலி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி மாஞ்சோலை எஸ்டேட் நிலங்கள், தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மாஞ்சோலை மலைப்பகுதியில் மொத்தம் 8,373.57 ஏக்கர் நிலம், கடந்த 1929- ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் மூலம் பிபிடிசிஎல் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்தக் குத்தகை காலம் முடிவடையவுள்ள நிலையில், நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
முதற்கட்டமாக, கடந்த 2025- ஆம் ஆண்டு மே மாதம் 8,152.13 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய 221.44 ஏக்கர் நிலப்பரப்பில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்புகள், தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் இதர கட்டுமானங்கள் இருந்ததால் அந்த நிலம் மட்டும் நிறுவனத்தின் வசம் இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த மே 29- ஆம் தேதி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மீதமுள்ள 221.44 ஏக்கர் நிலத்தையும் 15 நாட்களுக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க பிபிடிசிஎல் நிறுவனத்திற்கு அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் நோட்டீஸ் வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை 11) அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் முன்னிலையில், நோட்டரி பப்ளிக் சாட்சியத்துடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் பிபிடிசிஎல் நிறுவன சட்ட மேலாளர் மற்றும் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் எஞ்சிய 221.44 ஏக்கர் நிலமும் முறைப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் கடந்த ஓராண்டு காலமாக பிபிடிசிஎல் நிறுவனத்தின் குத்தகையில் இருந்த ஒட்டுமொத்த 8,373.57 ஏக்கர் நிலப்பரப்பும் தற்போது முழுமையாக தமிழ்நாடு வனத்துறையின் நேரடி கட்டுப்பாடு மற்றும் உடைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாஞ்சோலை கடந்து வந்த பாதை
கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு அணையைத் தாண்டி சுமார் 3,000 அடி மலை உயரத்தில் இந்த மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இந்த இடம், சிங்கப்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தது. மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பிபிடிசிஎல் இங்கு தேயிலை தோட்டம் அமைக்க விரும்பியது.
இதையடுத்து மொத்தம் 99 ஆண்டுகள் (1929- 2028) குத்தகைக்கு அப்போதைய சிங்கப்பட்டி ஜமீன் அந்நிறுவனத்திற்கு 8,373.57 ஏக்கர் நிலத்தை வழங்கியிருந்தார். அங்கு அந்நிறுவனம் தேயிலைத் தோட்டம் அமைத்து தொழிலாளர்களைப் பணியமர்த்தியது. திருநெல்வேலி மாவட்டத்தின் மிகவும் குளிர்ச்சியான பகுதியாக மாஞ்சோலை அறியப்படுகிறது, 'ஏழைகளின் ஊட்டி' என்றும் அழைக்கப்படும்.
இந்தியாவில் அதிக மழைப்பொழிவு தரும் பகுதிகளில் ஒன்றாகவும் மாஞ்சோலை அறியப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 7 மாதங்கள் இங்கு மழை பதிவாகும். ஆனால் இங்கு தேயிலை தோட்டம் அமைந்திருந்ததால் பெரிய அளவு அரசு சார்பில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படவில்லை. ஜமீன் சட்டம் ரத்து செய்யப்பட்டபோது அந்த பகுதி முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் தொழிலாளர்களின் நலனைக் காத்தில் கொண்டு தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள பகுதியை மட்டும் வனத்துறை கையகப்படுத்தவில்லை. இதற்கிடையில் ஜமீன் போட்ட குத்தகை காலம் 2028 உடன் முடிவடைய இருப்பதால் தேயிலை தோட்டம் அமைந்துள்ள நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க பிபிடிசிஎல் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கிடையில் இந்நிலம் தொடர்பான வழக்கு ஒன்றில் மாஞ்சோலை பகுதி அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. மேலும் குத்தகை காலம் முடியும்போது தேயிலை தோட்டம் அமைப்பதற்கு முன்பு இருந்ததைப் போன்று அங்கு கட்டிடங்கள் உட்பட எந்த இடையூறும் இல்லாமல் முழு வனப்பகுதியாக மாற்றி வனத்துறையிடம் கொடுக்க வேண்டுமென தனியார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தேயிலை தயார் செய்ய பயன்படுத்திய இயந்திரங்களை எடுத்து செல்வது, கட்டிடங்களை இடிப்பது, தேயிலை செடிகளை அழிப்பது உள்பட பல்வேறு வேலைகள் இருப்பதால் குத்தகை காலம் முடிவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே (2024) தேயிலை உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது. மேலும் அங்கு பணியாற்றி வந்த சுமார் 500 தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தொழிலாளர்கள் விருப்ப ஓய்வை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. ஆனாலும் தொழிலாளர்கள் பலர் மாஞ்சோலையைவிட்டு கீழே இறங்காமல் தங்களுக்கு அரசுப் போதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். மாஞ்சோலையில் விவசாயம் செய்வதற்கு நிலம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதேசமயம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் மாஞ்சோலையில் தொழிலாளர்கள் தங்குவதை அரசு விரும்பவில்லை. எனவே அவர்களை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டது. பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு சார்பில் அவர்களுக்கு கீழே குடியிருப்பு வசதி, வங்கியில் கடன் உதவி போன்றவை வழங்கப்பட்டன. அதை ஏற்றுக்கொண்டு பலர் கீழே இறங்கினாலும்கூட 50- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளைக் காலி செய்யாமல் தொடர்ந்து மாஞ்சோலையில் வசித்து வந்தனர்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைத்து தொழிலாளர்களும் கீழே இறங்க சம்மதித்துள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த தேயிலை எஸ்டேடட் பகுதியும், தற்போது வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மஞ்சோலை தேயிலை எஸ்டேட் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.