மாநகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம்
கரூர்:கரூர் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன், மூன்றாவது நாளாக, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
கரூர் மாநகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட ஊதியம், 760 ரூபாய் வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிறு அன்று விடுமுறை வழங்க வேண்டும். பி.எப்., - இ.எஸ்.ஐ., அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 7 முதல் மாநகராட்சி அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்ததாரர் தரப்பில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையிலும், ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என, நேற்று மூன்றாவது நாளாக, துாய்மை பணியாளர்கள் கரூர் மாநகராட்சி அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக நேற்று, ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்பட, பல்வேறு அமைப்பினர், துாய்மை பணியாளர்களை
சந்தித்து, போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்தனர்.