'மிசா'வில் ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
சென்னை: ''கடந்த தி.மு.க., ஆட்சியை, பத்து 'பவர் புரோக்கர்கள்' தான் நடத்தினர்,'' என, த.வெ.க.,வை சேர்ந்த அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னையில் நிர்மல்குமார் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'மிசா'வில் கைதானது தொடர்பாக பல விவாதங்கள் உள்ளன. 'மிசா'வில், தாக்கப்பட்டவர்களில், ஸ்டாலின் பெயர் சாட்சியாக மட்டுமே உள்ளது.
தி.மு.க., செய்த தவறுகள், துரோகங்களில் இருந்து தமிழகத்தை மாற்றி வருவதை சொல்லித்தான் ஆக வேண்டும். மூன்று தலைமுறையாக எதை சொல்லி தி.மு.க.,வினர் ஏமாற்றினர் என்பதை, இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்வது கட்டாயம்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், 'டாஸ்மாக்' நிர்வாகத்தை நடத்திய ரத்தீஷ் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். ஸ்டாலினின் மாப்பிள்ளை மற்றும் மகனுடன் இருக்கும் 10 பேருடன் சேர்ந்து, 'டாஸ்மாக்'கை, ரத்தீஷ் என்ற தனி நபர் கட்டுக்குள் வைத்திருந்தார். அதனால், சட்டசபையில் அவரது பெயரை முதல்வர் குறிப்பிட்டார்.
ரத்தீஷ் போன்ற 'பவர் புரோக்கர்களை' வைத்து, தி.மு.க., அரசை நடத்தியுள்ளனர். தற்போது, அவருக்கு எதிராக, தேடுதல் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரந்தாமனுக்கு, ஆட்சியில் இருந்தபோது 'சீட்' கொடுக்கவில்லை. இப்போது, இடைத்தேர்தலில் நிறுத்தி உள்ளனர்.
இவ்வாறு கூறினார்.