📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 10, 2026 10:33 AM

'தம்பி விஜய் சொன்னது உண்மை தான்..' மிசா சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்!

'தம்பி விஜய் சொன்னது உண்மை தான்..' மிசா சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்!

'தம்பி விஜய் சொன்னது உண்மை தான்..' மிசா சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய விவாதத்தின் போது, முதல்வர் விஜய் மிசா வழக்கை சுட்டிக்காட்டி தாடை சைகை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த ஸ்டாலின், அவசரநிலை கால சிறை அனுபவங்களையும், தாடை எலும்பு முறிவு உள்ளிட்ட கொடுமைகளையும் விளக்கி, வரலாற்றை மாற்ற முடியாது என வலியுறுத்தி, சட்டமன்ற மரியாதை காக்க முதல்வர் கண்ணியமாக நடக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக மே 11 முதல் ஜூன் 23 வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் தொடங்கி கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 28 நாட்கள், 170 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தொடரில் 14,399 கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் பல காரசார விவாதங்களும் சட்டப்பேரவையில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆவேசமாக பதில் அளித்தார். அப்போது திமுகவினர் எந்தவொரு விமர்சனத்திற்கும் பதில் அளிக்காமல், மிசா விவகாரத்தையே முன்னிறுத்துவதாக கூறிய அவர், அந்த மிசாவை பற்றி தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று, தனது தாடையில் கை வைத்தபடி, சைகை ஒன்றை, சட்டசபையில் வெளிப்படுத்தியிருந்தார். இது, மிசா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் இருந்தது என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

முதலமைச்சரின் இந்த சைகைக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், முதலமைச்சருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தையும் திமுக அறிவித்துள்ளது.

இந்தசூழலில் தான் தன்மீது மோசமான விமர்சனத்தை வைத்த முதலமைச்சர் விஜய்க்கு பதிலளித்திருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின், முதலமைச்சர் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம் .

அண்மையில நடந்து முடிந்த சட்டமன்றத்துல நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் - நம்முடைய உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கி இருக்கறத நான் உணர்றன்.

அதுவும், இந்த சர்ச்சைல முக்கியமா என்னுடைய சிறை வரலாறும் இருக்கறதால, நான் அத பத்தி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்பறேன். தம்பி விஜய்., நீங்க சொன்னது உண்மைதான்.. பொய் எல்லாம் இல்ல.. எமர்ஜென்ஸி காலத்துல, 30-1-1976 அன்னைக்கு அத எதிர்த்து தலைவர் கலைஞர் மெரினா கடற்கரைல மிகப்பெரிய கூட்டத்த கூட்டி, மிசா சட்டத்தை கடுமையா விமர்சித்தத தொடர்ந்து- அப்ப இருந்த ஒன்றிய அரசாங்கம் உடனே திமுக ஆட்சிய கலைச்சாங்க.

ஆட்சிய கலைச்ச அடுத்த நொடி மிசா சட்டத்துல என்ன அரெஸ்ட் பண்றதுக்காக கோபாலபுரம் வீட்டுக்கு போலீஸ் வந்தாங்க.. அன்னைக்கு நான் வீட்ல இல்ல.. பையன் பிரச்சாரத்துக்கு போயிருக்கான்.. நாளைக்கு வந்துடுவான்.. வந்ததும் நானே போன் பண்றன்.. வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்கன்னு கலைஞர் சொல்லி அனுப்பிட்டாரு. அடுத்த நாள் நான் வந்ததும் அவரே போலீஸ வர சொல்லி, அரெஸ்ட் பண்ண சொல்லிட்டாரு.

சிறைல எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு.. எங்கள கொண்டு போய் அடைச்சதே தொழுநோயாளிகள் இருக்கற இடத்துலதான். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள்ள அடைச்சு வெச்சாங்க.. அந்த அறைக்குள்ளயே ஒரு பானைலதான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்கனும். அந்த இடமே ரொம்ப துர்நாற்றமா இருக்கும். அங்கதான் நாங்க தூங்கணும். நைட்ல தூங்க விடாம போலீஸ் லத்தியால அடிப்பாங்க.. பூட்ஸ் காலால மிதிப்பாங்க..

இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதிகள வெச்சு வேற எங்கள கொடூரமா அடிப்பாங்க. அவங்க அடிச்சதுல என் கூட இருந்த அருமை அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயில்லயே இறந்து போனாரு.

அவங்க அடிச்சதுல என் தாடை எலும்பெல்லாம் உடைஞ்சுச்சு... நீங்க கூட இப்படி கைவெச்சு தாடைய காமிச்சீங்க இல்லையா? அது கரெக்டுதான் .. இன்னிக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கு.. நான் இல்லன்னு சொல்லல.

பொது வாழ்க்கைல இருக்கறவங்களுக்கு.. முக்கியமா தமிழர்களுக்காகவும்.. தமிழ்நாட்டுக்காகவும் போராடறவங்க நிறைய பேருக்கு இந்த மாதிரியான அடக்குமுறைகள் நடந்து இருக்கு.. போராளிகள் எல்லாம் இத தாண்டிதான் வந்து இருக்கோம். எதிர்த்து போராடறதும்… அதோட விளைவுகள சந்திக்கறதும் எங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்ல.

நீங்க கொள்கை தலைவரா சொல்ற அறிஞர் அண்ணா காலத்துல இருந்து திமுகவோட வரலாறே இதுதான்.. அந்த வரலாறுல நானும் இருக்கங்கறது எனக்கு பெருமையான ஒரு விசயம்தான். யார் என்ன கொச்சைபடுத்தினாலும், வரலாற மாத்த முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்.

சந்தேகம்னா நீங்க சட்டமன்றத்துல ஒரு லைப்ரரி இருக்குன்னு சொன்னீங்க இல்லயா? அங்க எல்லா ஆவணங்களும் இருக்கும்.. அங்க போய் என்னோட போராட்ட வரலாற நீங்க படிச்சி பாருங்க! உண்மை என்னன்னு புரியும்.

இரண்டாவதா சர்க்காரியா கமிஷன் பத்தியும் எங்க தலைவர் கலைஞர் பத்தியும் தவறான தகவல பேசி இருக்கீங்க.. ஊழல் குற்றச்சாட்டுகள சொல்லி இருக்கீங்க... சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதுக்கு அப்புறம் ஒன்றியத்துலயும், மாநிலத்துலயும் பல முறை ஆட்சி மாறிடுச்சு.. இந்த குற்றசாட்டுகள்ள எதாவது உண்மை இருந்திருந்தா கண்டிப்பா நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.. இத்தனை வருசமா அரசியலுக்காக கலைஞர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவங்க சொன்ன பொய்யான குற்றச்சாட்ட நீங்களும் சொல்லிட்டு இருக்கீங்க.

அதுமட்டுமில்லாம, அமலாக்கத்துறை எழுதன கடிதத்தை எடுத்துக்கிட்டு, அதுல எங்க மேல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கறதா சொல்றீங்க.. அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95 சதவீதம் வழக்குகள்ள, இதுவரைக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கபடாம – குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு இருக்காங்க.. பெரும்பாலும் அரசியல் பழி வாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவபடுதுங்கறது இங்க இருக்கற எல்லாருக்குமே நல்லா தெரியும். உங்களுக்கு தெளிவா சொல்லணுன்னா உங்க கூட்டணில இருக்கற காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மேல கூட அமலாக்கத்துறை பல வழக்குகள போட்டு இருக்கு. இதெல்லாம் ஒன்றிய அரச கொள்கை எதிரியா சித்தரிக்கிற உங்களுக்கு எப்படி தெரியாம போச்சு?

மாண்புமிகு முதலமைச்சர் தம்பி விஜய், நான் உங்ககிட்ட கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான்.. தமிழ்நாடு சட்டமன்றத்துக்குன்னு ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கு. பல பெரும் தலைவர்கள்.. மாமனிதர்கள் தமிழ்நாட்ட செதுக்குன இடம் அது. அந்த பொறுப்பு இப்ப உங்களுக்கும் இருக்கு . சட்டமன்றத்துல சட்டம் ஒழுங்கு பிரச்சனை. மக்கள் நல திட்டங்கள்.. தமிழ்நாட்ட மேலும் மேலும் எப்படி முன்னேற்ற பாதைக்கு கொண்டு போறது.. தமிழ்நாட்டோட உரிமைகள எப்படி பாதுகாக்கறது... இதெல்லாம் விவாதம் பண்ணுங்க..

வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8

அதுதான் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மக்களுக்கும் நல்லது.. அதவிட்டுட்டுட்டு தேவையில்லாத சர்ச்சைகளை சட்டமன்றத்துல பேச வேணாங்கறதுதான் என்னோட கோரிக்கை. நீங்க முதலமைச்சரா ஆனதும் என்ன சந்திக்க என் வீட்டுக்கு வந்தீங்க.. அப்ப நான் உங்க கரம் பிடித்து வரவேற்றேன். அப்ப, நாம பேசும் போது, நீங்க என்கிட்ட “தேர்தல் பிரச்சாரத்துல உங்கள ரொம்ப விமர்சிச்சு பேசிட்டேன்.. I am sorry சார்ன்னு சொன்னீங்க.. அதுக்கு நான், “பரவால்ல பிரதர் ... அதையெல்லாம் நான் மனசுல வெச்சுக்கல… நீங்க இப்ப ஒரு மாநிலத்தோட முதலமைச்சர்.. இனி யாரப் பத்தி பேசும் போதும் அந்த கண்ணியத்தோட பேசுங்கன்னு சொன்னன். அதையெல்லாம் நீங்க மறந்துட்டீங்க போல?

திரும்பவும் சொல்றன்... ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோட உங்களோட வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்கணும் . நாமதான் மக்களுக்கு முன்னுதாரணம். அத மறந்துடாதீங்க. நீங்க வகிக்கற பெரிய பொறுப்ப உணர்ந்து நீங்க செயல்படணும். சட்டசபையவே ரீல்ஸ் எடுக்கற இடமா மாத்துனது... நாங்க கட்டுன பாலத்து மேல நின்னு போட்டோ ஷூட் பண்றதுன்னு ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்தறீங்க .

உங்களோட திறனற்ற நிர்வாகத்த மறைக்க இப்படி விதவிதமா ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையயே ஏமாத்திட்டு இருக்கீங்க . ஆனா ரியாலிட்டி என்ன? உண்மை ஊர தாண்டுறதுக்குள்ள பொய் உலகத்தையே சுத்தி வந்துடும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்கள்ல… அதுதான் நடந்துட்டு இருக்கு…

உங்க ஆட்சியில தினம்.. தினம் கொலை .. திருட்டு.. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்ன்னு சட்டம் ஒழுங்கு படுகுழில இருக்கு. பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்த ரத்து பண்ணி தமிழ்நாட்டோட வளர்ச்சிய 15 வருசம் பின்னாடி கொண்டு போய் இருக்கீங்க... விவசாயிகளுக்கு முழமையான கடன் தள்ளுபடின்னு வாக்குறுதி குடுத்தீங்க.. ஆனா அதையும் ஒழுங்கா பண்ணல.. அனைத்து குடும்பங்களுக்கும் வருசத்துக்கு 6 சிலிண்டர்ன்னு சொன்னீங்க.. இப்ப தகுதி உள்ளவங்களுக்கு 3 சிலிண்டர் மட்டும்ன்னு அந்தர் பல்டி அடிச்சு இருக்கீங்க..

மகளிர் உரிமை தொகை 2500 ரூபாய்ன்னு சொன்னீங்க.. இன்னும் நாங்க குடுத்த அதே 1000 ரூபாயதான் குடுத்துட்டு இருக்கீங்க . இன்னும் பல வாக்குறுதிகள் பத்தி வாயே திறக்காம இருக்கீங்க.. அப்ப சொன்னதெல்லாம் ஒண்ணு .. இப்ப செய்யறது எல்லாம் ஒண்ணு. மாற்றம் வேணும்ன்னு நினைச்சு வாக்களிச்ச மக்கள்.. குறிப்பா நமது இளைஞர்கள், உண்மையாவே இப்ப என்ன மாற்றம் வந்து இருக்கு.. இது சரியான மாற்றமா அப்படிங்கறத கவனிங்க. எது நிர்வாக திறன் வாய்ந்த அரசு.. எது திறமையில்லாத அரசுங்கறத நீங்க புரிஞ்சுங்குங்க .

குறிப்பா, கழக உடன்பிறப்புகளுக்கு நான் வலியுறுத்த விரும்பறது என்னன்னா… மக்கள் நமக்கு முழுமையா ஒட்டு போடல, நாம ஆட்சிக்கு வர முடியல அதனால இந்த ஆட்சில நடக்கற தவறுகளால மக்கள் பாதிக்கப்படும் போது, நமக்கென்னனு இருக்க கூடாது, அப்படி ஒரு எண்ணம் நம்ம சித்தாந்தத்துலயே கிடையாது. ஆட்சிய இழக்கறத திமுக என்னிக்குமே தோல்வியா நினைச்சுது இல்ல.. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கற மாதிரி, இத மக்கள் பணியோட இன்னொரு முகமாதான் நான் பாக்கறன்… ஆட்சில இருக்கமோ… இல்லையோ… என்னிக்கும் தமிழ்நாட்டோட உரிமைக்காகவும்.. வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் நாம சண்ட செஞ்சிட்டே இருக்கணும். அவங்க தாத்தாவுக்காக சண்ட செஞ்சோம்… அவங்க அப்பாவுக்காக சண்ட செஞ்சோம்.,. இப்ப அவங்களுக்காக சண்ட செய்வோம்… இதுதான் நம்ம திமுகவோட வரலாறு.. அந்த வரலாறு எப்பவும் மாறாது. மாறவும் கூடாது. நன்றி ..வணக்கம்” என பேசியுள்ளார்.