📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 17, 2026 09:30 PM

கிளார்க் கீ, போட் கீயில் இரவுநேர முன்னோடித் திட்டம் நீட்டிப்பு

கிளார்க் கீ, போட் கீயில் இரவுநேர முன்னோடித் திட்டம் நீட்டிப்பு

போட் கீ, கிளார்க் கீ வட்டாரங்களில் மதுபான விற்பனை நேர நீட்டிப்பும், சர்கியுலர் ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட வாகனம் இல்லாத வார இறுதிகளும் ஓர் ஆண்டு சோதனைக்குப் பிறகு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டு நீடித்த முன்னோடித் திட்டம், வெற்றிகரமான முடிவுகளைக் கொடுத்ததுடன் வர்த்தகர்களின் வலுவான ஆதரவையும் பெற்றது.

அதையடுத்து, இம்மாதம் 18ஆம் தேதியிலிருந்து மதுபான விற்பனை நேரம் நீட்டிக்கப்படுவதுடன் வாகனம் இல்லாத வார இறுதிகளும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) கூட்டறிக்கை வெளியிட்டன.

போட் கீ வாட்டர்ஃபிரண்ட், சர்கியுலர் ரோடு, லோரோங் தெலுக், கென்டன் ஸ்திரீட் ஆகியவற்றில் புதிய மதுக்கூடங்கள், இரவு விடுதிகளைத் தொடங்குவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தனர்.

இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, கிட்டத்தட்ட 37 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னோடித் திட்டத்திற்குட்பட்ட மண்டலத்தில் மது விற்பனை நேரத்தை நீட்டிக்க முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களில் 92க்குக் காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்கம் இந்தத் திட்டங்களை அதிகாரபூர்வமாக நடைமுறைப்படுத்தும் என்று தேசிய வளர்ச்சி, நிதி துணையமைச்சர் ஆல்வின் டான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அது சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையை வளர்க்கவும் இரவுநேர தெரிவுகளை அதிகரிக்கவும் உதவும் என்றார் அவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“சிங்கப்பூர் ஆறு ஒரு முக்கியமான பாரம்பரிய, வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குப் பகுதி. அது விறுவிறுப்பான இரவு வாழ்க்கைக்குப் பங்களிக்கிறது,” என்றார் டான்.

சோதனைத் திட்டம் அதிக வருகையாளர்களை ஈர்த்து வர்த்தக நடவடிக்கைகளைப் பெருக்கியதா என்பதைக் காட்ட புள்ளிவிவரங்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த சுற்றுலாப் புள்ளிவிவரங்கள், சிங்கப்பூர் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவதைக் காட்டுகின்றன என அவர் கூறினார்.