📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 15, 2026 05:01 PM

மேகதாது அணை விவகாரம்: இருமாநில எல்லையில் பதற்றம்

மேகதாது அணை விவகாரம்: இருமாநில எல்லையில் பதற்றம்

ஓசூர்: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடக எல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தமிழகம் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இரு மாநில விவசாயிகளும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி புதன்கிழமை (ஜூலை 15) ஓசூர் அருகே தமிழக எல்லையில் கர்நாடகா அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திரளாகப் பங்கேற்ற தமிழக விவசாயிகள், மேகதாது அணைப் பகுதியை நோக்கிப் பேரணியாகச் செல்லப்போவதாக அறிவித்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்குப் போட்டியாக, கர்நாடக எல்லையில் சில கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

"மேகதாதுவில் கண்டிப்பாக அணை கட்டப்படும்,” என்று கர்நாடக விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.

மேலும், இரு மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மேகதாது அணைக்கு ஆதரவாக முழக்கங்களும் எழுப்பினர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இரு மாநில எல்லையிலும் பதற்றம் நிலவுவதால் கர்நாடகாவுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

ஆனால், கர்நாடகா மாநிலப் பேருந்துகள் தமிழகத்திற்குள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன.

மற்ற வாகனங்கள் எந்தவிதத் தடையுமின்றி சென்று வந்தாலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.