📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 01, 2026 01:32 AM

மேகதாது அணை விவகாரம்…

மேகதாது அணை விவகாரம்…

மேகதாது அணை விவகாரம்… - தமிழகத்துக்கு எதிராக மோடி அரசு செயல்படுகிறதா?

நதி நீர் தொடர்பான பிரச்னைகளை வெறும் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே அணுக முடியாது. குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம், நீர்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தும் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை தமிழக முதல்வர் விஜய் பெங்களூரில் சந்திக்கவிருக்கிறார். இந்தச் சூழலில், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்குச் சாதகமான ஒரு பதிலை நாடாளுமன்றத்தில் மத்திய ஜல்சக்திதுறை இணையமைச்சர் தெரிவித்திருக்கும் விவகாரம், தமிழகத்தில் தகிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன், `தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது’ என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

கர்நாடகா முதல்வராக டி.கே.சிவக்குமார், ஜூன் 3-ம் தேதி பதவியேற்ற பிறகு, மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தி ருக்கின்றன. இந்த நிலையில், பா.ம.க மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய ஒரு கேள்விக்கு, மத்திய ஜல்சக்திதுறை இணையமைச்சர் ராஜ் பூஷண் சௌத்ரி எழுத்து மூலமாக ஜூலை 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு பதிலளித்தார். அதில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுமானம் மேற்கொள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக மாநிலம் பெற வேண்டும் என்று 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை’ என்று அவர் கூறியிருக்கிறார்.

அந்த பதில் கர்நாடகாவுக்குச் சாதகமாக இருப்பதால், மேகதாது விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக் கிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியிருக் கின்றன. அதேநேரம், கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தை, ஜூலை 28-ம் தேதி டெல்லியில் நடத்தினார் கர்நாடகா முதல்வர். அதில், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய கல்வியமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய இணையமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விவகாரம் தமிழக விவசாயிகளின் கோபத்தைக் கிளறியிருக்கும் சூழலில், ‘மத்திய இணையமைச்சரின் பதிலைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். ஏற்கெனவே, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாரை தமிழக முதல்வர் விஜய் ஆகஸ்ட் 3-ம் தேதி சந்திக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ‘மேகதாது திட்டத்தைக் கைவிடுமாறும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரியும் டி.கே.சிவக்குமாரிடம் விஜய் வலியுறுத்துவார்’ என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்திருந்தார்.

தற்போது, மத்திய இணையமைச்சரின் கருத்து சர்ச்சையாகியிருக்கும் நிலையில், அது குறித்து லிவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான வெ.ஜீவகுமாரிடம் பேசினோம். “2018-ம் ஆண்டு அமலுக்கு வந்த காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தின் (Cauvery Water Management Scheme) பத்தி 15-ல், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் புதிய நீர்த் திட்டங்களைத் தொடங்கக் கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகள் தெளிவாக இடம்பெற்றுள்ளன. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும், ‘காவிரியின் மேற்பகுதியில் அமைந்துள்ள மாநிலங்கள், அந்த நதியை நம்பியுள்ள கீழ்ப்பகுதி மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் புதிய அணைகள் அல்லது நீர்த் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது’ என்று தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கிறது. எனவே, மத்திய இணையமைச்சர் அளித்துள்ள விளக்கம் தேவையற்றது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானதும்கூட.

புதிய அணைத் திட்டங்கள், காவிரியை நம்பியுள்ள தமிழகம் உள்ளிட்ட கீழ்ப்பகுதி மாநிலங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தை பாதிக்குமா என்பதை அறிவியல், சட்டரீதியாக ஆய்வுசெய்வது மத்திய அரசின் கடமை. அதற்கு பதிலாக, கர்நாடகாவுக்குச் சாதகமாக சட்ட விளக்கமளிப்பது நடுநிலைக்கு எதிரான செயல்.

தமிழக அரசு, இதை வெறும் அரசியல் அறிக்கைகளின் அளவில் மட்டுமே அணுகாமல், உறுதியான சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். முக்கியமாக, ஒரு சிறந்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்து சட்டரீதியிலேயே போராட வேண்டும். கர்நாடகா அரசை மட்டுமல்ல, நடுநிலையைக் கடைப்பிடிக்கத் தவறிய மத்திய அரசையும் ஒரு தரப்பாகச் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர வேண்டும்” என்கிறார் வெ.ஜீவகுமார்.

இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``மத்திய அரசு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்து ஏற்கக்கூடியது அல்ல. ஏற்கெனவே காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில், `காவிரியில் புதிதாக எந்த கட்டமைப்பையும் கர்நாடகா மேற்கொள்ள வேண்டு மென்றாலும், காவிரியால் பயன்பெறும் மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்டவற்றின் ஒப்புதலின்றி எதையும் செய்யக் கூடாது’ என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அந்தத் தீர்ப்புக்கு மாறாக, யார் எதைச் செய்தாலும் அதைச் சட்டமும் உச்ச நீதிமன்றமும் அனுமதிக்காது. அதனால், இந்த விவகாரத்தில் தமிழகம் பதற்றப்பட வேண்டியதில்லை. சட்டபூர்வமாக அணுகியே தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்’’ என்றனர்.

தமிழக அரசு சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மாநில உரிமையைக் காக்குமா?